கதிரைச் சிலேடை வெண்பா 17-20
நற்குணமு ளோருமரு ணாடுசிவ யோகியருங் கற்பங் கடக்குங் கதிரையே - வெற்பரிந்தோன்
தூவியா கத்தற் சுமப்பா னருள்புரிந்த
மாவியா கத்தன் மலை (18)
வெற்பு அரிந்தோன் - மலையின் சிறகை அரிந்த இந்திரன், தூவியாகத் தற் சுமப்பான் அருள் புரிந்த - மயிலாகத் தன்னைச் சுமக்குமாறு அருள் புரிந்த, மாவியாகத்தன் மலை - பெருமைமிக்க விசாகத் திருநாளுக்குரியவனாகிய முருகக் கடவிளினது மலை, நற்குணமுள்ளோர் - நற்குணமுடைய பெரியோர், கற்பு அங்கு அடக்குங் கதிரையே - தாங் கற்கும் கல்விப்பயனை உலகியலிற் செலுத்தாது முருகனது திருவடிகளை நினைக்கும் மெய்யுணர்விலே செலுத்துங் கதிரைப்பதியே யாகும், அருள் நாடு சிவயோகியர் - திருவருளைத்தேடும் சிவ யோகியர்கள், கற்பங் கடக்குங் கதிரையே - தாய்வயிற்றிற் கருவாகி யுதிக்கும் பிறவிகளை கடக்குங் கதிரைப்பதியேயாகும்.
மாலேறு சோலை மலையலரும் வண்டுகளுங்
காலாறு காட்டுங் கதிரையே - சேலேவை
மாமடுவை வேலைமலை மானோக்கி யார்தழுவ
மாமடுவை வேலை மலை. (19)
சேல் ஏவை மாமடுவை வேலை மலை - சேல் மீனையும் அம்பையும் மாம்பிஞ்சையும் வேற்படையையும் பொருது வென்ற, மான் நோக்கியார் தழுவும் - மான்போலும் மருண்ட நோக்கமைந்த வள்ளி நாயகியாரும் தெய்வயானையாரும் தழுவியிருக்கின்ற, மா அடுவை வேல் ஐ மலை - மாமரத்தை வெட்டிய கூரிய வேலை ஏந்திய தலைவனது மலை, மால் ஏறு சோலை மலையருகு - மயக்க மிகுதியைத் தரும் இருண்ட சோலைகளை உடைய மலைச்சாரல்கள், கால் ஆறு காட்டு்ங் கதிரையே - சிற்றருவிகளை ஆங்காங்கு காட்டகின்ற கதிரைப்பதியேயாகும், வண்டுகள் - அங்குள்ள வண்டுகள், ஆறு கால் காட்டுங் கதிரையே - ஆறு கால்களைக் காட்டுங் கதிரைப்பதியாகும்.
துப்பிதழி யாரிடையுஞ் சூலுடையார் மென்னடையுங்
கைப்பிடியை யொக்குங் கதிரையே - செப்புமொழி
கண்டடக்குங் கோலம் பகப்பிடிசேர் கற்பகமென்
கண்டடக்குங் கோலனமர் காப்பு (20)
கண்டு அடக்குஞ் செப்புமொழி - கற்கண்டின் இனிமையை அடக்கிய மழலை மொழியாளாகிய வள்ளியம்மையாரும், கோல் அம்பகப் பிடி - அம்பையொத்த கண்களையுடைய பிடி நடையாளாகிய தெய்வயானை அம்மையாரும், சேர் கற்பகம் - இருமருங்குஞ் சேரநின்ற கற்பகதருப்போன்றவனும், என் கண் தடக்குங் கோலன் - எனது சிறிய புன் கண்கள் தனது பேரொளியைக் கண்டமையால் வேறொன்றையும் நோக்கலாற்றாது தடுமாறும் அழகிய திருக்கோலத்தை உடையவனுமாகிய முருகப்பெருமான், அமர் காப்பு - உறையுங் கோவில், துப்பு இதழியார் இடை - பவளம் போன்ற சிவந்த வாயினையுடைய மகளிரது இடை, கைப்பிடியை ஒக்குங் கதிரையே - கையின் ஒருபிடியளவை ஒத்துச் சிறுத்த கதிரைப் பதியேயாகும், சூல் உடையார் மென்னடை - கருப்பமுடைய மகளிரது தளர்ந்த நடை, கைப்பிடியை ஒக்குங் கதிரையே - துதிக்கையுடைய பெண் யானையின் அசைந்த நடையை ஒத்திருக்கும் கதிரைப்பதியே யாகும்.