கதிரைச் சிலேடை வெண்பா 16,17
பின்னூட்டங்களின் பின் இந்த இரு பாடல்களையும் பொருளுடன் பதிந்திருக்கிறேன். உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடுங்கள்.சொற்புலவர் தூக்கினிலுந் தூயமலர்ச் சோலையிலுங்
கற்பு மலருங் கதிரையே - வெற்புடனே
மாமூல வேரறுத்து வாழ்வமரர்க் கீந்தவஞ்ச
மாமூல வேரறுப்பான் வைப்பு (16)
வெற்புடனே - மகேந்திர மலையுடனே, மா மூல வேரறுத்து - அம்மலையிலுள்ள அரக்கர் குலத்தின் பெரிய மூலவேராகிய சூரனையும் அழித்து, அமரர்க்கு வாழ்வு ஈந்த - தேவர்களுக்கு அமரவாழ்வை முன்போலக் கொடுத்தவனாகிய, வஞ்ச மாமூல வேரறுப்பான் - உயிர்களது வஞ்சனை மிக்க இருண்மலத்தின் மூலமாகிய அவாவை அறுக்கும் முருகக் கடவுளது, வைப்பு - ஊர், சொற்புலவர் தூக்கினில் - சொல்வன்மையுள்ள புலரவர்களது செய்யுள்களில், கற்பு மலரும் கதிரையே - கற்பனை நயங்கள் விரிந்த பல பொருட்களை காட்டும் கதிரைப்பதியேயாகும், தூயமலர்ச்சோலையில் - தூய்மைவாய்ந்த பூஞ்சோலைகளில், கற்பு மலருங் கதிரையே - முல்லைக்கொடிகள் மலருங் கதிரைப்பதியேயாகும்.
நல்லார் மதிமுகத்து நாடு முலைமுகத்துங்
கல்லாரம் பூக்குங் கதிரையே - மல்லாடி
வந்தே விடுந்தேரான் மாயவடி வேற்பணித்த
வந்தே விடுந்தேரான் வாழ்வு. (17)
மல்லாடி வந்து ஏ விடுந்தேரான் மாய - போராடி எதிர்வந்து அம்புகளைத் தொடுத்த பகைவனாகிய சூரன் அழியுமாறு, வடிவேல் பணித்த - கூரிய வேலை ஏவிய, வந்து ஏவிடுந்தேரான் - வாயுதேவன் செலுத்திய தேரையிவர்ந்த முருகக்கடவுளின், வாழ்வு - கோயில், நல்லார் மதிமுகத்து - பெண்களது சந்திரன் போன்ற முகத்தில், கல்லாரம் பூக்குங் கதிரையே - குவளை மலர்கள் பூக்குங் கதிரைப்பதியேயாகும், நாடும் முலைமுகத்து - விரும்பப்படும் தனங்களின் மேல், கல் ஆரம் பூக்குங் கதிரையே - இரத்தினமாலை பொலியுங் கதிரைப்பதியேயாகும்.