கதிரைச் சிலேடை வெண்பா 1- 5
யாழ்ப்பாணத்து நவாலியூர் க. சோமசுந்தரப்புலவர் அவர்களால் கதிர்காமக் கந்தன் மேல் கண்ணோய் தீர பாடி கண்ணோய் தீர்ந்ததே இந்த கதிரைச் சிலேடை வெண்பாவாகும். இந்நூல் சிலேடை வெண்பாக்களினால் ஆன நூறு பாடல்களால் ஆனது. பொருளணியாகிய சிலேடையணியும் சொல்லணியாகிய மடக்கணியும் இந்த பாடல்கள் தோறும் நின்று சிறப்புச்செய்கின்றன. இப்பாடல்களில் சிலேடையணிகள் எல்லாம் கதிர்காமப்பதியினையும் மடக்கணிகள் எல்லாம் முருகப்பெருமானையும் போற்றி துதிக்கின்றன.இனி நூலுக்கு வருவோம்.
காப்பு
விநாயகர்
கானுயிர்பூஞ் சோலைக் கதிரைச்சி லேடைவெண்பா
நானுரைக்கச் செஞ்சோ னயந்தருமே - வானவர்க்கு
முன்னுனை மாமுகவன் முன்னருளு மைந்துகரத்
தன்னானை மாமுகவன் றாள்.
மாணிக்கப் பிள்ளையார்
தேவரு மேத்துங் கதிரைச்சி லேடைவெண்பா
நாவரு மேத்தி நனிபணிந்தாற் - பூவருளு
மாதங்கம் பாதி வளர்வரையீ மாணிக்க
மாதங்கம் பாத மலர்.
நாமகள்
காசிப் பதிநேர் கதிரைச்சி லேடைவெண்பா
பேசிப் பரவப் பெரிதருளும் - ஆசைமுகன்
அம்புயத்தி னுவி லகத்திற் சிரத்தில்வெள்ளை
அம்புயத்தில் வாழு மனம்
நூல்
பூமருவு தண்டலையும் பொன்னனையார் பூங்கரமுங்
காமருவண் டார்க்குங் கதிரையே - ஓமருவும்
அத்தமறை தந்தா னறிய னனுங்கமுடி
யத்தமறை தந்தா னகம் (1)
பாவலருங் கண்டும் பணிமொழியா ருஞ்சுரும்புங்
காவலரைக் கூடுங் கதிரையே - தேவ
னுருக்குளத்து வந்தா னொரமுருகா காவென்று
ருக்குளத்து வந்தா னுறை (2)
பூப்பயிலும் பொன்னன்னார் பொன்புனைவார் பூங்கரத்தைக்
காப்பணியுஞ் செல்வக் கதிரையே - மாப்பிறவி
யாறக் கரத்தா னனைத்தெம்மை யாள்குமரன்
ஆறக் கரத்தா னரண். (3)
மங்கலிமார் வாண்முகமும் வண்டலைபூந் தண்டலையுங்
கங்கண மேவுங் கதிரையே - வெங்கலிதீர்
காசரவ ணத்தன் கமலத்தன் கைகுவிக்கு
மாசரவ ணத்தன் மலை (4)
உண்ணேய மிக்கோரு மோங்குமிளங் காவமலர்க்
கண்ணீர் சொரியுங் கதிரையே - யெண்ணுமறை
பன்னிருகை யாரின்பம் பாவமறுத் தீயுமருட்
பன்னிருகை யாரின் பதி (5)