செவ்வாய், அக்டோபர் 31, 2006
யாழ்ப்பாண நூல் நிலையம்
யாழ்ப்பாண நூல் நிலையத்தின் இரண்டு வித தோற்றங்களை பாருங்கள். இந்த படத்தை திலீபன் என்கிற எனது நண்பர் அனுப்பியிருந்தார்.


திங்கள், அக்டோபர் 30, 2006
வரதர்
ஈழத்தின் முன்னோடி மறுமலர்ச்சி எழுத்தாளர் என்று அறியப்படும் வரதரோடு நீண்ட நாட்களாகவே எனக்கு பழக்கம் இருந்து வருகின்றது. நான் புத்தகங்கள் வாசிக்கத்தொடங்கிய காலத்தில் இருந்து (1994இன் முற்பகுதி) அவரது புத்தகச் சேமிப்பே எனது நூலகமாக இருந்துவந்தது. அவரது அனேகமான படைப்புகளை கையெழுத்து பிரதியாகவே வாசித்து விடும் வாய்ப்பு எனக்கு கிடைத்து வந்தது. அக்காலங்களில் நான் ஓவியமென்ற பெயரில் கிறுக்கியவற்றையெல்லாம் திருத்துவதும் அவரே.
வரதர் அவர்களை ஒரு ஓவியராக அறிந்தவர்கள் மிகச்சொற்பமே. அவரது வீட்டு சுவர்களை அலங்கரிக்கும் அவரது தாயாரின் ஓவியம் உட்பட அனைத்து ஓவியங்களும் அவரது கைவண்ணமே.
நான் கொழும்பால் யாழ்ப்பாணம் வந்ததும் என்னை பார்க்கவும் எனது சிறிய புத்தக தொகுதியை பார்க்கவும் வீட்டுக்கு வந்திருந்தார்.
தான் ஒரு கதை எழுத தொடங்கியிருப்பதாயும், தான் எழுதும் கையெழுத்து தனக்கே புரிவதில்லை எனவும் இதனால் ஒரே அத்தியாயத்தை மூன்று முறை திருப்பியெழுத வேண்டி இருந்ததாயும் குறைபட்டுக்கொண்டார்.
கடந்த வருடம் இதற்காகவே ஒரு மடிக்கணினி வாங்கி தமிழ் ரைப்பிங் பழகி கணினியில் எழுதத்தொடங்கியிருந்தவர் இப்போது அது பழுதடைந்து கொழும்பிற்கு அனுப்பியிருந்தார். அது எப்போது திரும்பி வரும் என்றும் பேசும்போது கவலைப்பட்டவாறு கூறினார். என்னுடைய சிறிய புத்தகச் சேர்க்கையிலிருக்கும் புத்தகங்களில் தன்வரலாறு கூறும் புத்தகங்களையும் உளவியல் புத்தகங்களையும் வாசிப்பதற்கு தருமாறு கேட்டவர் தான் வாசிக்கும் ஆர்வத்திலேயே வாசிப்பதாயும் வாசிப்பது இரண்டு நாட்களுக்கு மேல் ஞாபகம் நிற்பதில்லை என்றும் குறைபட்டுக்கொண்டார்.
இத்தனை வயதிலும் தெளிவான பேச்சு , அறிந்து கொள்ளும் ஆர்வம், புத்தகங்கள் மீது தீராத காதல், எழுதுவதில் துடிப்போடு வியக்க வைக்கின்றார் வரதர் ஐயா.
வியாழன், அக்டோபர் 26, 2006
லேற்றஸ்ற் கைப்பேசி
நேற்று ஹர்த்தால். ஒண்டும் செய்யேலாம போயிற்றுது. உங்களுக்காக இந்த லேற்றஸ்ற் கைப்பேசின்ர படத்தை தந்திருக்கிறன். பாருங்கோவன்

திங்கள், அக்டோபர் 23, 2006
யாழ்ப்பாணத்து பெருமாள்
யாழ்ப்பாணத்து பெருமாள் கோவிலை பாக்க விரும்பிறாக்களுக்காக நான் இந்த புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறன். இந்தை படத்தை என்ர நண்பர் ஒருவர் எடுத்திருந்தார். அவற்ற கணனியில இருந்துதான் நான் எடுத்தனான்.

வியாழன், அக்டோபர் 19, 2006
ஆத்மாநாம் படைப்புகள்
2002ம் ஆண்டு பிரம்மராஜன் தொகுத்து காலச்சுவடு பதிப்பகத்தால் வெளிவந்தது. 34 வயதில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன மதுசூதன் எனும் இயற்பெயர் கொண்ட ஆத்மாநாமின் படைப்புகள் பூரணமாக தொகுக்கப்பட்டிருப்பதாய் தொகுப்புரை சொல்கிறது. (ஆனாலும் ஆத்மாநாம் பிரம்மராஜனுக்கு மட்டும் தான் கடிதம் எழுதியிருப்பார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை). கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், கடிதங்கள் என்பன இந்நூலில் காணப்படுகின்றன.
ஆத்மாநாமின் கவிதைகள் எப்போதும் அடிமைத்தனத்தை எதிர்ப்பதாயும் சற்றே கமியூனிச இயக்கங்கள் சார்வதாயும் காணப்படுகிறது. இலத்தீன் அமெரிக்க கவிஞர்களின் பாதிப்பும் சிறிதளவு காணப்படுகிறது என்றே நான் எண்ணுகின்றேன். ஒரு தீவிரமான ஓட்டம் ஆத்மாநாமின் கவிதைகளில் காணப்படும் ஒரு முக்கிய அம்சமாகும்.
சில ஆத்மாநாமின் வரிகளை பாருங்கள்.
ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக்கிழி
உன் சகவாசிகளின் கிறுக்குத்தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்.பாட்டாளி மக்களுக்கான இந்தவரிகளும் யோசிக்க வைக்கிறது
இந்தச் செருப்பைப்போல்
எத்தனை பேர் தேய்கிறார்களோ
இந்தக் கைக்குட்டையைப்போல்
எத்தனை பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப்போல்
எத்தனை பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்தடனாவது விட்டதற்குமற்றவர்களுக்காய் பாடுபடும் ஒருவனாக அனேக கவிதைகளில் ஆத்மாநாம் காணப்படுகிறார்.
பழக்கம் எனும் இந்தக் கவிதையில் வரும் வரிகள் ஆத்மாநாமை நன்கு வெளிப்படுத்துகின்றன.
என் கால்கள்
என் நடை
என் சதுரம்ஆத்மாநாம் தன்னைப்பற்றிய சிறு கட்டுரையும் இத்தொகுப்பில் காணப்படுகின்றது.
புத்தர்சிலை
உலகத்திலேயே மிக உயரமான புத்தர் சிலை இதுதான். தம்புள்ளை தங்கக் கோயிலில இருக்குது. 100 அடி உயரம். ஒருக்கா சுற்றுலாப்போகேக்க எடுத்த படம் இது. நீங்களும் பாருங்கோவன்.

திங்கள், அக்டோபர் 16, 2006
அட - 1
இந்த படங்களை கன காலத்துக்கு முந்தி ஏதோ ஒரு இணையத்தளத்தில இருந்து எடுத்தனான். நீங்களும் பார்த்து மகிழுங்கோ.




பெரிசாப்பாக்கோணுமெண்டால் படத்துக்கு மேல சொடுக்குங்கோ.
புத்தகக் கடைகள்
யாழ்ப்பாணத்து புத்தகக் கடைகள் எல்லாம் பூட்டியிருக்கு அல்லது பழைய புத்தகக் கடையாப்போச்சு. கொழும்பில வாங்கின புத்தகங்கள் எல்லாம் வாசிச்சும் முடிஞ்சுது. இப்போதய திட்டம் எல்லாம் இருக்கிற புத்தகங்களை திருப்பி வாசிக்கிறது தான். முதலாவதா ஆத்மாநாம் படைப்புகளை எடுத்து வச்சிருக்கு. முதல் வாசிக்கேக்க யோசிச்சனான் மனிசன் ஒரு ரெண்டு வருசமெண்டாலும் கூட உயிரோட இருந்திருக்கலாம் எண்டு. உங்களுக்கு ஏதாவது நல்ல புத்தகம் அம்பிடடால் எனக்கும் சொல்லுங்கோ காசு அனுப்பிறன் வாங்கி அனுப்புங்கோ. புத்தகங்கள் இல்லாம கஸ்டமாக் கிடக்கு. என்ர கணனியில வந்து இருந்தாச்சு தானே எனிமேல் கொஞ்சம் அடொப் பிளாஸ் பற்றியும் எழுதலாம் எண்டு நினைக்கிறன். முந்தி கொம்போனன்ற் எண்ட பெயரில கொஞ்சம் எழுதி வச்சிருந்தனான். அதுகளையும் எடுத்து விடலாம். இந்த பதிவுகளை மறுமோழியேக்க அரசியலை போராட்டத்தை சேத்துப்போடதையுங்கோ. அதுக்கும் என்க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
வெள்ளி, அக்டோபர் 13, 2006
யாழ் மண்
யாழ்ப்பாண மண்ணை மீள மிதிச்சதில யாழ்ப்பாணத்திற்கு கொஞ்சம் பாரமெண்டாலும் எனக்கு சரியான சந்தோசம். இரண்டு நாளா சுத்திப்பாத்தன் போகக்கூடிய இடங்களுக்கு. அனேகமா எல்லா சாப்பாட்டுக்கடையும் பூட்டு. எனக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துது. யாழ்ப்பாணத்து விலைகள்தான் கொஞ்சம் பயப்பிடுத்துது. பால்மா, மின்கலம் எல்லாம் வாங்கவே ஏலாது. இப்பத்த விலைகளை நீங்களும் கொஞ்சம் பாருங்கோவன். முந்திவித்த விலைகள் அடைப்புக்குறிக்குள்ள போட்டிருக்கு.
தேங்காய் எண்ணெய் - 480.00 (240.00)
அரிசி - 110.00 (38.00)
சீனி - இல்லை (60.00)
பருப்பு - 140.00 (60.00)
சிகரெட் - 30.00 (12.00)
மண்ணெண்ணெய் - 190.00 (45.00)
பெற்றோல் - 450.00 (101.00)
நெருப்பெட்டி - 18.00 (2.50)
இன்னும் விலைகள் தெரியோணுமெண்டா சொல்லுங்கோ இன்னொரு முறை மிச்சத்தையும் எழுதுறன்.
வியாழன், அக்டோபர் 12, 2006
யாழ்ப்பாணம்
சரி கடைசியா இரண்டு மாதத்துக்கு பிறகு ஒருமாதிரி நேற்று பின்னேரம் யாழ்ப்பாணம் வந்து சேந்தாச்சுது.
UN இன்ரை ஸ்பெசல் பிளேனில. பாப்பம் இனி கொஞ்சம் கூட வாசிக்கலாம் கொஞ்சம் கூட எழுதலாம். யாழ்ப்பாண நிலமை பாக்க கொஞ்சம் கவலையாத்தான் கிடக்கு. இணைய வசதியும் குறைவுதான். ஆண்டவன் அருள்தரோணும் அலட்டுறதுக்கு..
செவ்வாய், அக்டோபர் 10, 2006
துரத்தும் இறந்த காலம் அச்சுறுத்தும் நிகழ்காலம்.
ஒக்டோபர் 2006 தீராநதியில் வாஸந்தியின் துரத்தும் இறந்தகாலம் அச்சுறுத்தும் நிகழ்காலம் கட்டுரை வாசித்தேன் . வாஸந்தியிடம் நான் ஒன்று கேட்க விரும்புகின்றேன் கேத்தீஸ் இலங்கைத்தமிழர்களுக்காக செய்த நன்மை ஒன்றையாவது உங்களால் சொல்ல முடியுமா?
இடதுசாரிக்கொள்கை கொண்ட கேத்தீசுக்கு ஜனநாயகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதாக கூறுகின்றீர்களே. கட்டுரைக்கு உண்மைகள் தேவை வாஸந்தி ஆலாபனைகள் அல்ல.
கேத்தீசின் கொலைக்கு உங்களைப்போல் யாராவது இங்குள்ள இலங்கைத்தமிழர்கள் கவலைப்பட்டதாய் நீங்கள் காற்றுவாக்கிலேனும் கேள்விப்பட்டதுண்டா? சிங்களத் தலைவர்களுக்குத்தான் தாங்கொணாக் கவலை உங்ளைப்போல.
தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் போராட்டத்தின் நியாயமான காரணங்களையும் இப்போது ஆராய்வது வீண் எண்றும் ஆயுதப்போராட்டமாக மாறியதும் அதன் சுழி மாறிவிட்டதென்றும் கூறுகின்றீர்களே எத்தனை எத்தனை ஆயுதமேந்தாப்போராட்டங்கள் தமிழ் மண்ணில் நடந்ததென்றும், ஒருவன் நீர் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து மடிந்தான் என்றும் சிறைகளில் பலர் கொலையுண்டார்கள் என்றும் நீங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லையா? அல்லது மறந்து விட்டீர்களா? அல்லது மறந்தது போலும் நடிக்கிறீர்களா?
தமிழ் பத்திரிகையாளர்களை எல்லாம் சாடுகிறீர்களே இந்து பத்திரிகை ராம் பற்றி நீங்கள் அறிந்திருப்பதில் ஏதாவது நியாயம் இல்லை என்று உங்களுக்கு தோன்றுகின்றதா வாஸந்தி?
அகதிகளாய் இந்தியாவிற்கு மக்கள் வருவதற்கு உங்கள் கட்டுரையில் இருப்பது போன்ற ஒரு காரணத்தினை எத்தனை நாள் யோசித்து கண்டுபிடித்தீர்களோ தெரியவில்லை. சும்மா என்றாலும் சுற்றுலாப்போல் போய் பார்த்து கதைத்து வாருங்கள் வாஸந்தி அவர்கள் பட்ட கஷ்டத்தை படும் கஷ்டத்தை.
தமிழர்கள் கண்ணியமாக, சுதந்திரமாக, ஜனாநாயக அமைப்பில் இலங்கை அரசுடன் சமாதானமாக வாழப்போராடிய நீலன் திருச்செல்வம். எப்பேர்ப்பட்ட பட்டம். இதை எழுதும்போது புனைகதை எழுதுகின்றேன் என்றா நினைத்துக்கொண்டு எழுதினீர்கள் வாஸந்தி?
ஒட்டுமொத்த சித்திரத்தையும் பார்க்க சொல்கிறீர்களே. உங்களுடைய ஒட்டுமொத்த சித்திரம் எதை குறிக்கும் என்று தயவு செய்து சொல்லுங்கள். எனக்கு மிகுந்த குழப்பாமாய் உள்ளது வாஸந்தி.
வாஸந்தி உங்களுக்கு ஒன்று சொல்லுகின்றேன். உங்களுக்கு தெரிந்தவைகளை மட்டும் எழுதுங்கள். கேத்தீசுடன் உங்கள் நட்பைப்பற்றி எழுதுங்கள். ஆனால் தமிழர் பிரச்சனையைப்பற்றி எழுதுவதை தமிழர் நலன் கருதி விட்டு விடுங்கள். அதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. அனுபவித்தீர்களா? அல்லது
உண்மையில் அனுபவித்தவர்களை கேட்டாவது பார்த்தீர்களா?
கால்மேல் கால் போட்டு காசுக்கு கதையெழுதும் உங்களுக்கெங்கே புரியப்போகின்றது எங்கள் வேதனைகைளும் வாழ்க்கைகளும்?
ஞாயிறு, அக்டோபர் 08, 2006
கவிதைகள்
எனக்கு பிடிக்காமல் போனவைகள் பற்றி
எப்போதும் நான் சிந்தித்ததில்லை
ஆனால்
கவிதைகள் எனக்கு பிடிக்காமல்
போனபோது கொஞ்சம்
யோசித்துப்பார்த்தேன்
கவிதைகளை எனக்கு
மிகவும் பிடித்திருந்தது
அப்போது நான்
கவிதைகளை படிக்கத் தொடங்கவே இல்லை
கவிதைகள் என்றால்
புல்லரிக்கும் எனக்கு
அப்போதெனக்கு
கவிதைகள் புரிவதேயில்லை.
கவிதைகள் புரியத்தொடங்கியபோது
கவிதையே வாழ்க்கையானது
கவிதைகளை நான்
கிறுக்கத் தொடங்கிய போதுதான்
கவிதைகள் கொஞ்சம்
உதைக்கத் தொடங்கியது
கவிதைகளை நான்
யோசித்தபோது
கவிதைகள் எனக்கு
வெறுக்கத் தொடங்கியது
கவிதைகள் எனக்குள்
தானாய் வந்தபோது
கவிதைகள் எனக்கு
சுத்தமாய் பிடிக்காமல் போனது.
ஏனென்றால் கவிதைகள்
உண்மைகளை சொல்லிவிடுகின்றன
எனக்கு பிடிக்காமல் போனவைகள் பற்றி
நான் சிந்திப்பதேயில்லை.
முட்டைவாசிகள்
அப்துல் ரகுமானின் முட்டைவாசிகள் நூலை நேற்றுத்தான் ரசிக்கக் கிடைத்தது. முதற்பதிப்பு 1995 இல் வெளிவந்தது. 23 தலைப்புகளில் கவிஞர்களின் சுருக்கக் குறிப்புக்களோடு அவர்களின் கவிதைகளின் ஆழமும் அழகும் தெளிவுறச்சொல்லப்பட்டிருந்தது. பப்லு நெருடா ஹைக்கூ கவிஞர் மொரிடாகே போன்ற கவிதை உலகிற்கு பிரசித்தமானவர்களும் அடக்கம்.
பேசாமல் இருப்பதன் மூலம் சொற்களின் எல்லையை மௌனத்தை எட்டிப்பிடிக்கின்றேன்.பப்லூ நெருதாவின் அழகிய கவி வரிகள் ஆழத்தையும் அழகாய் விளக்குகிறார் அப்துல் ரகுமான்.
இந்த அழகிய பூக்களிடையே ஒரு மரங்கொத்தி தேடுகிறதுசெத்த மரத்தைவிமர்சகர்களை குறிவைக்கும் இந்த ஹைக்கூவை நீங்கள் கேள்விப்படாமல் போயிருக்ககூடும்.
இயேசுவைப்பற்றிய இவ்வளவு அழகான கவிதையை நான் ஒரு போதும் கேட்டதில்லை
இத்தகைய இரக்கமுடைய நிலத்தை யாராவது கண்டதுண்டா?இங்கே முள்ளை விதைத்தால்ரோஜா முளைக்கிறது.சார்லஸ் மிங்கசின் வினோதமான கற்பனைகளை எமக்கும் ஊட்டுகிறார் நூலாசிரியர்
இறந்துபோன மயானங்களில்எல்லா இடங்களிலும் இறந்தவர்கள்உயிருடையவர்களைஅமைதியாக புதைத்துக்கொண்டிருப்பார்கள்எப்படி இருக்கிறது இது?
காதல் பற்றி ஹாரிட்க்ரேன் சொல்வதை பாருங்கள்
சிறுநீர்த்தொட்டியில்வழுக்கிச் செல்லும்எரிந்த தீக்குச்சிகாதல்கொஞ்சம் திகைக்கவும் யோசிக்கவும் வைக்கிறது.
கவிதை ஆர்வலர்கள் வாசிக்க நல்ல நூல் என்று நிச்சயமாய் சொல்லக்கூடிய நூல். வாசித்துத்தான் பாருங்கள்.
(காசு குடுத்து வாங்கி வழமைபோல)
சனி, அக்டோபர் 07, 2006
கைப்பேசிகளால் புகைப்படம்
நான் கைப்பேசிகளால் புகைப்படம் எடுப்பது சம்பந்தான் ஒரு பதிவை சில நாட்களின் முன் பதிந்திருந்தேன். ஆனால் இப்போது அதனை தமிழ் மணம் திரட்டியூடாக பார்க்க முடிந்தாலும் நேரடியாக எனது குடிலில் காணமுடியவில்லை. என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கின்றேன்.
Edit post இலும் பதிவை காணமுடியவில்லை.
தொடுப்பு
நட்பல்லாதது
இருட்டுக்களோடு
வாழப்பழகியவன் நான்
குருடனென்று
நினைத்தோருமுண்டு பெரும்
வீம்பனென்று
கதைத்தோருமுண்டு
அவர்களுக்கெப்படித் தெரியும்
அவர்கள் வெளிச்சங்களும்
இருட்டுக்கள் தானென்று....
மெல்ல மெல்ல
சொல்லிக்கொடுத்தீர்கள்
வெளிச்சம் இதுதான் என்று
காட்டியும் தந்தீர்கள்
கீழே விழுந்து விடுவாய்
கையைப் பிடித்துக்கொள்
என்றீர்கள்
வேண்டாமென்று மறுத்த போதெல்லாம்
உன்னிலும் உன்னை
நன்கறிந்தோம் என்றீர்கள்
உன்னால் முடியும் என்றீர்கள்
உவகை கொள்ள வைத்தீர்கள்
ஒரு கணமெனக்கும்
நினைக்கத் தோன்றியது
உண்மையில் அது வெளிச்சம் தானென்று
ஆதரவாய் அழைத்து வந்தீர்
வரைவிலக்கணங்கள் சொல்லி வைத்தீர்
அத்தோடுவெளிச்சம் அதிகம் என்பதால்
கண்களையும் மூடிக்கொள் என்றீர்கள்.....
இருட்டுக்களோடு
வாழப்பழகியவன் நான்.....
வியாழன், அக்டோபர் 05, 2006
உலக மொழிகள்
உயிருள்ள மொழிகளின் எண்ணிக்கை : 6912
இவற்றுள் இறக்கும் தறுவாயிலுள்ள மொழிகள் : 516
உலகில் அதிகூடிய மக்கள் பேசும் மொழி : மன்டாரின் சைனீஸ்
அதிக மொழிகள் பேசப்படும் நாடு : பப்புவா நியூ கினியா (820 வாழும் மொழிகள்)
அதிக சொற்களை கொண்ட மொழி : ஆங்கிலம் (250,000)
குறைந்த சொற்களை கொண்ட மொழி : ரகி ரகி (
Taki Taki) (340 சொற்கள்)
அதிக மக்கள் பேசும் மொழிகள் என்று வகைப்படுத்தும் போது எங்கள் தமிழ் மொழி 16,17 இடத்தில் காணப்படுகின்றது. மயூரேசன் அச்சப்படுவது போன்று தமிழுக்கு அழிவு ஒருபோதும் வராது என்று நாமும் நம்புவோம்.
மொழி அடர்த்தி கூடிய நாடு : வனுவாத் ( மேலதிக விபரத்துக்கு வனுவாத் பற்றிய குறிப்பை பாருங்கள்)
புதன், அக்டோபர் 04, 2006
அறிவித்தல்
இத்தால் சகலருக்கும் அறிவிப்பது யாதெனில் நீங்கள் அனைவரும் உங்கள் டிஜிற்றல் கமராவைத் தூக்கிக்கொண்டு தயாராகுங்கள் என்றும் நான்
Advanced digital photography என்ற நூலைப்படிக்கத்தொடங்கி எனது புகைப்படமெடுத்தல் சம்பந்தமான அறிவை மேம்படுத்தத் தொடங்கிவிட்டேன் என்றும் இனிமேல் நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ அது சம்பந்தமான எனது அலட்டல்களை கேட்கப் போகிறீர்கள் என்றும் அவ்வாறு வாசித்து நீங்கள் ஏதேனும் பரிசோதனைகள் செய்தால் அதன் மூலம் உங்கள் புகைப்படம் எடுக்கும் திறமைக்கும் உங்கள் புகைப்படக் கருவிக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளி அல்லவென்றும் வலைப்பதிவர் சங்கங்கள் சார்பாக அறிவிக்கின்றேன்.
செவ்வாய், அக்டோபர் 03, 2006
பிற்கேன் தீவுகள் (Pitcairn islands)
இந்த சின்னஞ்சிறிய நாடு பற்றிய குறிப்புகள் முழுவதும் விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது.
பிற்கேன், கென்டர்சன், டியூசி மற்றும் ஒயினோ தீவுகள் (
Pitcairn, Henderson, Ducie and Oeno Islands) என்று உத்தியோக பூர்வமாக அழைக்கப்படும் பிற்கேன் தீவுகள் தென் பசுபிக் சமுத்திரத்திலுள்ள நான்கு தீவுகளை கொண்ட தீவுக் கூட்டமாகும். பசுபிக் பிராந்தியத்தில் இன்னமும் மீதமிருக்கும் பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட பிரதேசமும் இதுதான். இத்தீவுகளில் இரண்டாவது பெரியதான பிற்கேன் மட்டுமே மனிதர் வாழுகின்ற இடமாகும். தன்னாட்சியற்ற ஆளுகைப்பிரதேசமாக ஐக்கியநாடுகள் சபை இதனை அடையாளப்படுத்தியுள்ளது.
பரப்பளவு : 5 சதுர கிலோமீற்றர் (பிற்கேன் தீவு மட்டும்)
மக்கள் தொகை : 67 (2005)
பிற்கேன் கல்வி மைய இணையத்தில் 2003 க்கு பின்னரான கணக்கெடுப்பு இல்லை.வரலாறு : இத்தீவின் உண்மையான மக்கள் பொலிநீசியன்கள் ஆவார்கள். இத்தீவு 1838ம் ஆண்டு பிரித்தானிய ஆளுகையின் கீழ் வந்தது. 1859 இல் இத்தீவின் முழு குடித்தொகையும் (193 பேர்) நோவாக் தீவிற்கு குடிபோனார்கள். ஆனால் 18 மாதங்கள் கழித்து அவர்களில் 17 பேரும் பின் 5 வருடங்களின் பின் 27 பேரும் தம் சொந்த இடத்திற்கு திரும்பினார்கள். 1937 இன் பின் இத்தீவு மக்கள் ஒரு ஐம்பது பேரைத்தவிர வேறு நாடுகளுக்கு குடிபோய்விட்டார்கள் (முக்கிமாக நியூசிலாந்துக்கு ). இத்தீவின் ஆளுனராக நியூசிலாந்தின் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் செயற்பட்டு வருகின்றார்.
பொருளாதாரம் : மக்களின் வாழ்வாதாரம் மீன்பிடி மற்றும் விவசாயத்தில் தங்கியிருப்பதோடு பிரதான பொருளாதார வழியாக முத்திரை சேகரிப்போருக்கு முத்திரை விற்றல், தேன் மற்றும் கைவினைப்பொருட்கள் விற்பனை என்பன காணப்படுகின்றன.
மதம் : இங்குள்ள மக்கள் அனைவரும் ஏழாம் நாள் திருச்சபையினை சேர்ந்தவர்கள்
மொழி : இவர்கள் 18ம் நூற்றாண்டு ஆங்கிலத்தினை ஒத்த ஒரு மொழியினை பேசுகின்றார்கள்.
இங்கு அரச செலவிலான செய்மதி இணைய இணைப்பு அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
திங்கள், அக்டோபர் 02, 2006
லால் மொழி
புதிய விடயங்களை தேடி அறிவதில் என்னைப்போன்ற இளைஞர்களுக்கு???? எப்போதும் அலாதிப்பிரியம் இருப்பதை நான் கண்டிருக்கின்றேன். லால் என்ற மொழியைப்பற்றி மிக அண்மையில் தான் அறிந்தாலும் அதனைப்பற்றி நான் அறிந்தவற்றை இங்கு பதிகின்றேன்.
லால் என அழைக்கப்படும் இம்மொழி இன்னமும் வளர்ச்சியடையாத மொழியாகவே காணப்படுகின்றது. (இம்மொழி விரைவில் அழிந்துவிடும் என்பதே என் எண்ணம்). 2000 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இன்னமும் 749 தனி நபர்களே இம்மொழி பேசுபவர்களாக இருந்தார்கள். மத்திய ஆபிரிக்காவின் சாட்(Chad) நாட்டின் மொயன் சாரி நிர்வாகப்பிரிவிலுள்ள கோரி(Gori) தம்ரார்(Damtar) மற்றும் மெயிலா(Mailao) ஆகிய மூன்று கிராமங்களில் மட்டுமே இம்மொழி பேசப்படுகின்றது. இம்மொழிக்கென்று தனியான வரிவடிவம் ஏதும் கிடையாது.

இம்மொழி முதன் முறையாக 1977ம் ஆண்டுதான் பஸ்கால் பொயெல்டியூ(Pascal Boyeldieu) என்பவரூடாக மொழியியலாளர்களின் கவனத்திறகு வந்தது.
இம்மொழி பேசுகின்ற மக்கள் அனைவரும் முஸ்லீம்களாக இருக்கின்ற போதும் 20ம் நூற்றாண்டின் இறுதிப்பாதி வரை அவர்கள் பாரம்பரியமான யோண்டோ(Yondo) மொழியினையே பின்பற்றி வந்திருக்கின்றார்கள்.
லால் மொழிக்குடும்பத்தில் எஞ்சியிருக்கும் இவ் லால் மொழி சாட் நாட்டுச் சட்டப்படி தேசிய மொழியாக்கப்பட்டிருந்தாலும் இதனால் இம்மொழியின் வளர்ச்சிக்கு இதனால் எப்பயனுமில்லை.
பஸ்கால் பொயெல்டியூ என்பவரின் கருத்துகள் எல்லாம் உண்மையென நிரூபிக்கப்பட்டால், மொழியியல் ரீதியாக மத்திய ஆபிரிக்க மொழிகளின் எஞ்சியிருக்கும் ஒரே மொழி இதுவாகத்தான் இருக்கும்.
இம்மொழியில் இதுவரை அறியப்பட்ட எண்கள் ஒன்று, இரண்டு மற்றும் நான்கு மட்டுமே. இருந்தாலும் இப்போது விவசாயம் மற்றும் மீன்பிடி செய்து வரும் இம்மொழி பேசும் மக்கள் முற்காலத்தில் செம்மறியாடு வளர்ப்பவர்களாக இருந்தமையால் மேலும் எண்கள் இருந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.
ஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு
பரிமளம் சுந்தர் அவர்களின் முனைவர் பட்டத்திற்கான ஆய்வாகச்செய்யப்பட்ட இந்த ஒப்பாய்வு நூலுருப்பெற்றிருக்கின்றது (கரோன் - நீரோன் பதிப்பகம் புரட்டாதி 2005). நூலை வாசிக்கும் போது நூலாசிரியர் இது சம்பந்தமாய் ஆய்வு செய்தார் என்பதைவிட தவம் செய்தார் என்பது தகுமெனலாம்.
ஆறு தலைப்புகளாக ஆய்வு வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஜப்பானிய ஹைக்கூவின் தோற்றமும் வளர்ச்சியும்.
தமிழில் ஹைக்கூவின் வரவும் வளர்ச்சியும்
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள்
தமிழில் ஹைக்கூ கவிதைகள்
ஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஒப்பீடு
முடிவுகள்.
நல்ல ஹைகூசளை அடையாளம் காண முடிகின்றது. உதாரணத்துக்கு சில
இரவெல்லாம் உன் நினைவுதான் கொசுக்கள்ஐயோ இருட்டிவிட்டதே என் செம்மறி ஆட்டை பார்த்தீர்களாவிடிந்தால் தீபாவளி.மேலும் இந்நூல் இரு மொழி கவிதைகளின் உள்ளடக்கம் உத்திகள் வேறுபாடுகள் பற்றியெல்லாம் பேசிச்செல்கிறது. முரண் உத்திகள் பற்றி தனி விளக்கம். ஹைக்கூ எழுத விரும்பகிறவர்களுக்கு நல்ல விளக்காமாய் இருக்கும் என நினைக்கின்றேன்.
நூலாசிரியர் பெண் என்பதால் நூலின் பல இடங்களிலும் பெண்மை தொட்டுச் செல்கிறது. தவிர்த்திருந்தால் நல்லது போல் தெரிகின்றது. உதாரணத்திற்கு
Though I have no loveI too rejoiceThe change of clothesஎனக்கொரு காதலனும் இல்லைஆனாலும் நான் மகிழ்ந்திருக்கிறேன் ஆடைமாற்றம்யப்பானிய ஆடைமாற்ற திருவிழா பற்றிய ஹைக்கூ.. இங்கு
காதலனுக்கு பதில்
காதல் என மொழிபெயர்த்திருந்தால் சிறப்பாயிருக்கும் என்பது என் எண்ணம்.