முட்டைவாசிகள்
அப்துல் ரகுமானின் முட்டைவாசிகள் நூலை நேற்றுத்தான் ரசிக்கக் கிடைத்தது. முதற்பதிப்பு 1995 இல் வெளிவந்தது. 23 தலைப்புகளில் கவிஞர்களின் சுருக்கக் குறிப்புக்களோடு அவர்களின் கவிதைகளின் ஆழமும் அழகும் தெளிவுறச்சொல்லப்பட்டிருந்தது. பப்லு நெருடா ஹைக்கூ கவிஞர் மொரிடாகே போன்ற கவிதை உலகிற்கு பிரசித்தமானவர்களும் அடக்கம்.பேசாமல் இருப்பதன் மூலம்
சொற்களின் எல்லையை
மௌனத்தை
எட்டிப்பிடிக்கின்றேன்.
பப்லூ நெருதாவின் அழகிய கவி வரிகள் ஆழத்தையும் அழகாய் விளக்குகிறார் அப்துல் ரகுமான்.
இந்த அழகிய பூக்களிடையே
ஒரு மரங்கொத்தி தேடுகிறது
செத்த மரத்தை
விமர்சகர்களை குறிவைக்கும் இந்த ஹைக்கூவை நீங்கள் கேள்விப்படாமல் போயிருக்ககூடும்.
இயேசுவைப்பற்றிய இவ்வளவு அழகான கவிதையை நான் ஒரு போதும் கேட்டதில்லை
இத்தகைய இரக்கமுடைய
நிலத்தை
யாராவது கண்டதுண்டா?
இங்கே முள்ளை விதைத்தால்
ரோஜா முளைக்கிறது.
சார்லஸ் மிங்கசின் வினோதமான கற்பனைகளை எமக்கும் ஊட்டுகிறார் நூலாசிரியர்
இறந்துபோன மயானங்களில்
எல்லா இடங்களிலும்
இறந்தவர்கள்
உயிருடையவர்களை
அமைதியாக
புதைத்துக்கொண்டிருப்பார்கள்
எப்படி இருக்கிறது இது?
காதல் பற்றி ஹாரிட்க்ரேன் சொல்வதை பாருங்கள்
சிறுநீர்த்தொட்டியில்
வழுக்கிச் செல்லும்
எரிந்த தீக்குச்சி
காதல்
கொஞ்சம் திகைக்கவும் யோசிக்கவும் வைக்கிறது.
கவிதை ஆர்வலர்கள் வாசிக்க நல்ல நூல் என்று நிச்சயமாய் சொல்லக்கூடிய நூல். வாசித்துத்தான் பாருங்கள். (காசு குடுத்து வாங்கி வழமைபோல)