யாழிலிருந்து கிளம்பிடும் வீரம்
திராவிட முன்னேற்ற கழகம் சென்னையில் 13.03.1962 அன்று சுமார் ஐந்து இலட்சம் மக்கள் மத்தியில் நடாத்திய கண்டனக்கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் பேச்சு.
கப்பற் படையும் தரைப்படையும் சென்றன! மாற்றாருடன் போர் தொடுக்கவா? அல்ல அல்ல. சொந்த மண்ணிலே உழைத்து அம்மண்ணிலேயே சாவோம் எனச் சங்கநாதம் செய்திடும் அண்ணன் தம்பிகளை ஒடுக்க. படை தடை எதனாலும் பயந்து விட முடைநாற்றம் வீசும் முட்டைக்கூட்டமல்ல நாங்கள். மூச்சடக்கி முத்தெடுத்த இனம். முழுமதியென உலெகெலாம் ஒளி வீசி நின்ற பரம்பரை. எங்களை அழிக்க ஆயுதங்களால் முடியாது. அன்பால் வென்றோருண்டே ஒழிய அதட்டலால் எம்மை மிரட்டியோர் அவனியிற் கிடையாது என முழக்கமிட்டனர். படைவீரர்கள் பாயந்தனர். எதிர்நோக்கி வந்து இதோ மார்பு என்று காட்டினர். கீழே தள்ளி உருட்டி "கேடு கெட்டவர்களே துப்பாக்கி முனையிலிருக்கும் கத்தி கிழிக்கும் உமது குடலை" என்றனர். இருதயத்தையே எடுக்கத் துணிந்து விட்ட இந்த அரசியலில் குடல் போனால் என்ன உடல் போனால் என்ன எதற்கும் துணிந்தே விட்டோம் எனக் கூவினர் மக்கள். படைவீரர்கள் இதென்னடா தொல்லை என நிமிர்ந்தனர். காலிகளும் கூலிகளுமாயிருந்தால் அவர்களை எளிதில் அடக்கிவிட முடியும். இவர்களோ நல்லதொரு காரியத்துக்காக மக்கள் மனை போனால் என்ன என்று பாடிக்கொண்டு வந்துவிட்ட அறப்போர் வீரர்கள். அடி உதை என்று அகிம்சை பிறழ்ந்த முறையில் ஏதாவது காரியங்களில் ஈடுபட்டாலும் அதைக்காரணமாகக் கொண்டு சுட்டுத்தள்ளலாம். துப்பாக்கியை காணும்போது கூட, சுடுசொல் கூறாமல் அன்புரையே தருகிறார்கள். என்ன செய்வது என்று யோசித்தது அரசு. யோசனையின் விளைவாக முரட்டு மூளையில் உதித்தது ஒரு குருட்டு எண்ணம். நம்மை நம்பி வாழும் இந்த மக்களுக்கு அரிசி கிடைக்காமற் செய்துவிட்டால்? சோறின்றி இவர்கள் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும்? வயிறு வாடினால் எதுவும் வழிக்கு வந்துவிடுமன்றோ? இதனால் தானே அந்தக் காலத்தில் எதிரிகளை ஒடுக்க அவர்களுக்கு கிடைக்கும் உணவுப்பொருட்களை தடுத்து விடுவது ஒரு போர் முறையாகக் கருதப்பட்டது. ஆட்சி நம்முடைய கையில் அரிசி கிடைக்காமற் செய்துவிட்டால் பிறகு அறப்போராவது அட்டகாசப்போராவது. எல்லாம் அடங்கிவிடவேண்டியது தானே. சொந்த மண்ணில் வாழும் மக்கள் மீது இந்தப் பாணத்தை பாய்ச்சினர். மிக மிகக் கொடுமையான பாணம். கொடுங்கோலர் தம் மனத்தில் மட்டுமே உருவாக வேண்டிய பாணம். எத்தனை நாளைக்கு பட்டினி கிடக்க முடியும்? தானிருக்கலாம், தன் மனையாட்டியை இருக்கச் செய்யலாம், தாயிடம் கைகூப்பிக் கேட்டு பசியை அடக்கிக் கொள்ளச்சொல்லலாம், தான் பெற்ற மழலைச் செல்வங்கள் பசியால் துடிப்பதைப் பாதகன் கூடச் சகிக்க மாட்டானே? என்ன செய்வது, இந்தத் தடையை எப்படி நொறுக்குவது, என்று அறப்போர் வீரர்களல்ல நாட்டு மக்களே எண்ணினார்கள்.
அரசு அரிசி அனுப்பாவிடில் போகிறது. கழனிகளிலே நாங்கள் அறுத்தெடுத்த நெல்மணிக்கதிரை விற்றால் எமக்குப் பணந்தான் கிடைக்கும், மானத்துக்கு போரிடும் உம்மைவிடப் பணமோ எமக்குப் பெரிது? அஞ்சி அயராதீர்கள் - அரிசியை, நாங்கள் கொண்டுவந்து தருகின்றோம். இரயிலில் லாரியில் ஏற்றினால் தானே அரசு தடுக்கும். எங்கள் தலையில் முதுகில் சுமந்து வந்து தருகின்றோம், என்று முன்வந்தனர். அறப்போர் நடத்தும் மக்களை பழிவாங்க எண்ணிடும் அரசின் போக்கு கண்டு நாட்டுபுற மக்கள் பதறியது கேட்டு வணிகக் குடிமக்கள் கூடினர். அவர்கள் உள்ளமெலாம் மெழுகாகியது. இத்தனை நாளும் நாம் வாளாயிருந்தோமே? இதோ எமது உதவி எங்கெங்கு அரிசி கிடைக்குமோ அதையெல்லாம் வாங்கி நியாய விலைக்கு நாங்கள் தருகின்றோம். அதோடு உமது அறப்போருக்கு உதவியாக நிதியும் அளிக்கிறோம் எமது நெஞ்சம் உமக்கே என முன்வந்தனர். கொட்டுகிறது மழை தலையில், கொட்டுகிறது பசி வயிற்றில், கொட்டுகிறது அரசின் போக்கு நெஞ்சில் எனினும் ஆடாது அசையாது, இருந்த இடத்தில் இருந்தபடியே இலங்கைவாழ்த் தமிழர்கள், சர்க்காரது அலுவலகங்களில் செய்துவரும் மறியல் நடந்து வருகின்றது. யாழிலிருந்து இன்னிசையே கேட்கும். மோகன ராகத்தை இசைப்பது போல் அமைதியோடு வாழ்ந்த யாழ்ப்பாண நகரமும் ஏனைய தமிழ்ப்பட்டணங்களும், இன்று முரசொலிக்கின்றன. இம்முறை அங்கே நடைபெற்று வரும் அறப்போர் எளிதாக எண்ணக் கூடிய ஒன்றல்ல. ஏதாவது ஒரு அரசியற் கட்சியின் சார்பில் நடத்தப்படுவதுமல்ல. இலங்கையின் வடபகுதியிலும் கிழக்குப்பகுதியிலும் தமிழர்கள் அதிகம். அந்தப் பகுதிகள் யாவும் இன்று அறப்போர்க் களமாகி விட்டன. "யாரோ நடத்துகிறார்கள் நமக்கென்ன?" என்று போவோரில்லை. நடக்கும் அறப்போருக்கு நம்முடைய பங்கென்ன என்று கேட்கிறார்கள் ஒவ்வொருவரும். இலங்கைவாழ்த் தமிழர்களில் முஸ்லீம் மக்கள், குறிப்பிடக் கூடிய தொகையினராகும். அந்த மரக்கலராயரும் இப்போது மார்தட்டி இறங்கியிருக்கிறார்கள். அடுப்பங்கரைகளை விட்டு அணங்குகள் புறப்பட்டு அறப்போரிலீடுபட்டிருக்கின்றனர். எங்கும் பரபரப்புக் கூட்டம். இதைப்பற்றியே பேச்சு. ஓரு தேசிய எழுச்சி அங்கே உருவாகியிருக்கின்றது.
இலங்கை! - வாழப்போய்த் தங்கிய வம்பு மடமல்ல தமிழருக்கு. ஆண்டாண்டு காலமாய் அண்ணனும் தம்பியும் போல ஓடி விளையாண்ட கூடம். முடியுடை மூவேந்தர்கள் இறவாப் புகழோஞ்சியிருந்த காலத்திலே, இலங்கையும் தமிழ்நாடும் ஒரே தட்டிலுண்ணும் இரண்டு புறாக்களை போல் இருந்திருக்கின்றன. சோழ மன்னன் ராசராசன், இலங்கையின் வடபுலத்தை வென்று அந்த இடத்துக்கு மும்முடிச் சோழமண்டலம் எனும் பெயரைச் சூட்டினான். இலங்கையிலிருந்து கொணர்ந்த ஆட்களைக்கொண்டு காவிரிக்கு கரையமைத்தான் கரிகாற்பெருவளத்தான் என்பர். உட்பூசல்கள் உருவான நேரத்தில் இலங்கையரசர்கள் இடந்தேடி வந்தது இங்குதான். மூவேந்தர்களுக்குள்ளும் போர் மூண்டால் மூவரில் ஒருவரை ஆதரிக்க, சிங்கள அரசர்கள் படையுடன் வந்திருக்கின்றனர். பாண்டிய நாட்டு பைங்கிளிகள், இலங்கைச்சோலைக்கு வந்திருக்கின்றன. சோழனின் மணிமாடத்துக்கு சிங்களத்துச் செவ்வந்திப் பூக்களும் வந்திருக்கின்றன. இலங்கையின் இரத்தினங்களை எடுத்து சேரநாட்டு தேனிதழ் மாந்தர் சிரிப்புத் தவழும் தத்தமது உதடுகள் நிறத்துக்கு ஒப்பிட்டு மகிழ்ந்த காலமும் உண்டு. இலங்கையின் ஆதிக்குடிகள் திராவிடரே. பஃறுளியாறு கடல் கொள்ளப்பட்டபோது, இரத்தினத் தீவான இலங்கை பிரிபட்டது என்பர். சரித வல்லுனர் ஈழம் எனும் சொல்லே கேரளர் எனும் சொல்லிலிருந்து மருவியதாகவும் ஒரு ஆராய்ச்சி இருக்கின்றது. மலையாளத்தின் தென்னஞ்சோலைகளையும், இலங்கையிலும் அதே மண்வளம் இருப்பதையும் காட்டி இரண்டுக்கும் ஒப்புவமை கூறுவோரும் உண்டு. கதிர்காமத்துக் கந்தனையும், திருகோணமலை போன்ற இடங்களிலுள்ள திருக்கோயில்களையும், தமிழறிந்தான் இராவணனையும் சான்றுக்கிழுத்து பழந்தமிழர் வாழ்ந்த இடம் என்போரும் இருக்கின்றார்கள். இப்போதும் நெல்லை மாவட்டத்தில் ஈழத்துப் பிள்ளைமார் என்போர் இருக்கின்றார்கள். இவ்வளவு சான்றுகள் ஏன்?
யாழ்ப்பாணம் எனும் சொல்லே போதும் தமிழர்கள் எவ்வளவு தொன்மை கொண்டவர்களாக இலங்கையில் வாழகிறார்கள் என்பதனைக்கூற. இங்கே நம் பேச்சு வழக்கிலிருக்கின்ற தமிழைவிட, அங்குள்ளோர் பேசிடும் தமிழில், தூய்மையும் தொன்மையும் இருக்கின்றது.
இலங்கையில் மொத்த மக்கள் தொகை 90 இலட்சம். இதில் தமிழர்கள் தொகை 30 இலட்சம். மொத்த மக்களி்ல் மூன்றில் ஒரு பகுதியினர், தமிழர்கள். மக்கள் தொகையில் மட்டுமல்ல இலங்கையின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டவர்கள் தமிழர்கள். உழைப்பால் இலங்கையை உருவாக்கி வருகின்றார்கள். அறிவால் அந்நாட்டின் பெருமையை அதிகமாக்கி வருகின்றார்கள். தோட்டத்தொழிலாளர்களாக மட்டுமல்ல டாக்டர்களாகவும் தமிழர்கள் இருக்கின்றார்கள். நமது தாயகம் இலங்கை அதன் புகழே நம் பெருமை என்று இரண்டறக் கலந்து வாழும் தமிழ் மக்களின் முக்கியத்துவத்தை ஆண்ட வெள்ளையன் உணர்ந்தான். அதனால் அவன் காலத்தில் தமிழர்களுக்கும் அரசியலிலும் அதிகாரத்திலும் ஓரளவுக்கு இடங்கள் கிடைத்தன. இன்னும் சொல்ல வேண்டுமானால் அவன் காலத்தில் சிங்களத் தோழர்களும் தமிழக்குடிகளும் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். அதுமட்டுமன்றி வெள்ளை ஆதிக்கத்தை இலங்கையை விட்டு அகற்றவும் தொள் கொடுத்து போராடினார்கள் தமிழர்கள். சிங்களத்தின் அரசியல் வாதிகளுக்கு அப்போது ஆண்ட வெள்ளையனை வெளியேற்றும் வேலை இருந்தது. அந்த வேலை முடிந்து, ஆட்சி தங்கள் கைக்கு வந்ததும், கிடைத்த சுதந்திரத்தை சுகவழியாக்கும் மார்க்கத்தில் ஆளவந்தவர்கள் செல்லவில்லை. சிங்கள மக்கள் மன்சோர்வு அடைந்து தங்கள் செயல்த்திறமையை சந்தேகிக்க கூடாதே என்பதற்காக, ஒரே மொழி என்ற வெறித்தனத்தை உருவாக்கி ஆகா இவரைப்போல் நம்மொழிக்கு பாடுபடும் உத்தமருண்டோ? சிங்களத்தை காக்க எழுந்த சிங்கங்களே வாழி! என்று பாராட்ட வேண்டும் என்பதற்காகப் பாதகமான வழிகளில், சிங்கள அரசியல் வேட்டைக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டைக் கொளுத்திவிட்டு, எரியும் நெரு்பபில் சுருட்டுப்பிடிப்பவன் வாழ்க்கைச் சூதாடி மட்டுமல்ல ஏமாளியுங் கூட. தீ பரவுகிறது என்று தெரிந்தால் அதை அணைத்துவிட்டு அன்பால் எதனையும் வெல்கின்றவனே, புத்தரின் பொன்னான சீடனாவான் - சிறப்பும் அடைவான்.
பற்று என்பது வேறு, வெறி என்பது வேறு. மொழிப்பற்று எல்லோருக்கும் இருக்க வேண்டியதுதான். அனால் பற்றினையே வெறியாக்கி, எமது மொழியை நீ பயிலவேண்டும் என வற்புறுத்துவது, மனித நெறிக்கு அப்பாற்பட்டதாகும். நெறிமாறிய வழியிலே சிங்கள அரசு செல்கின்றது. ஒருவரல்ல, இருவரல்ல நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினராயிருக்கும் தமிழர் மீது சிங்களத்தை திணிக்கின்றது. இதன் சின்னமாக 1958ல் தமிழர்கள் பட்ட அவதியை நாம் மறந்திருக்க முடியாது. தமிழர் தம் கடைகள் சூறையாடப்பட்டதும் தமிழர்களை நிறுத்தி அவர்தம் முதுகிலும் மார்பிலும் சிங்கள எழுத்துக்களை பொறித்ததும், தமிழ்ப்பெண்களெல்லாம் அவமானப்படுத்தப்பட்டதும், எல்லாவற்றிற்கும் மேலாக 158 தமிழ் உயிர்கள் சாகடிக்கப்பட்டதும் உலகம் அறியும்.
பாலஸ்தீனத்திலிருந்த யூதர்களை இப்படித்தான் அரபுமக்கள் அஞ்சுமளவிற்கு அடாவடித்தனம் செய்து வந்தனர். இலங்கையை போல 30 இலட்சம் கூட அல்ல அவர்கள். 16 இலட்சம் தான். ஒரே பிடியாக இருந்து கடைசியில் இஸ்ரேல் என்கினற் தனிநாட்டை பெற்று இன்று ஐக்கிய நாடுகள் சபையிலும் அங்கம் வகித்து வருகின்றது. யூத மக்களுக்கு கேடுகள் ஏற்பட்டபோது அவர்கள் சார்பில் வாதாட ஐக்கிய நாடுகள் சபையில் பல நாடுகள் முன்வந்தன. பண்டித நேரு கூட இஸ்ரேல் பக்கம் நின்றார். இதனைச் சிங்கள நாட்டின் பார்லிமெண்டு உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டி "ஒரே மொழி என்றால் இரு நாடுகள்! இரு மொழி என்றால் ஒரே நாடு" என்று முழக்கமிட்டிருக்கின்றார். அந்தளவிற்கு நிலமை செல்லாமல் இலங்கை அரசு, பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது நம்முடைய ஆவல்.
காங்கோவில் நடைபெறுகின்ற அட்டூழித்தை கேளிவியுற்று, தயாள் என்கின்ற தன் பிரதிநிதியை நிறுத்தி, போதாதென்று இந்தக் கிழமை 4500 படைவீரர்களையும் தமிழர் ராஜா என்பவரி்ன் தலைமையின் கீழ் அனுப்பி வைத்திருக்கின்றது.
அந்தளவிற்கு கடுமையான முடிவுகள் எதனையும் எடுக்க வேண்டாம், நாமும் விரும்ப மாட்டோம், இலங்கைத் தமிழர்களும் ஏற்க மாட்டார்கள். அவர்கள் சார்பில் அண்மையில் தன்னைச் சந்தித்த இலங்கைப்பிரதமர் சிரிமாவொவிடம் ஒரு சொல் உதிர்த்திருக்கலாகாதா பண்டித நேரு. வேண்டாம் இவ்வளவு பெரிய அறப்போர் இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் தான் இலண்டனில் கூடிடும் காமன்வெல்த் மாநாட்டில் தினசரி சந்திக்கின்றனர் சிரிமாவும் நேருவும், அக்கறையிருக்குமாயின் ஒரு வார்த்தை பேசலாகாதா? அல்லது, காமன்வெல்த் மாநாட்டிலேயே கண்டித்து விளக்கம் கேட்கக்கூடாதா?
நேருவுக்கு உள்ள நிலமையைப்பற்றி மனத்துடிப்பு, ஏற்பட வழியில்லை. ஏனெனில் இது தமிழர் பிரச்சனை. வேண்டுமென்றுகூட அல்ல தமிழர் தம் குரலின் உண்மையினை உணரும் அசை ஏற்படும் வழிகூட கிடையாது அவருக்கு. அதனை எடுத்துச் சொல்லவோ இங்கிருக்கும் காமராசர் அரசு அஞ்சுகின்றது.
"அனாதைகள் அல்ல அவர்கள், கேடுற்றவர்களுக்கு பரிதாபம் காட்ட ஒரு அரசு இருக்கின்றது" என்கிற அச்சமாவது இருக்குமன்றோ! தமிழருக்கு ஒரு தைரியம் ஏற்படுமன்றோ!!
" ஓன்று, தமிழர்கள் கண்ணுக் கெடாத தொலைவில் கடல் கடந்து வாழ்ந்தாலும் அவர்களைப்பற்றி கவலைப்படுவது தி.மு.க தான்."
"நமக்கென இருப்பது, இன மரபு அறிந்தது, தி.மு.க ஒன்றுதான் என்ற உணர்வு அந்தத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது இரண்டாவதாகும்."
"மூன்று, அவர்களுக்கெல்லாம் நாம் தரக்கூடிய அனுதாபச் செய்தியும், ஆறுதல் செய்தியும், வாழ்த்தும் நல்லுரையும்தான்."
"வீழ்ந்து பட்ட தமிழருக்கும், விரட்டியடிக்கப்படும் தமிழருக்கும் நம்முடைய அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில் நமது கண்ணீரை காணிக்கையாக்குவோம். தாயிழந்து தவிக்கும் தனயனும், மகளை இழந்த தகப்பனும், அண்ணனை பறிகொடுத்த தம்பியும் தம்பியை பிரிந்த அண்ணனும் இப்படியாக, ஒரு கூப்பிடு தொலைவிலுள்ள இலங்கையில் இருந்து கொண்டு கொட்டும் கண்ணீருடனும், குமுறும் நெஞ்சத்தோடும் 30 இலட்சம் தமிழர்கள் வாடுகன்றார்கள். அங்குள்ள தமிழ்ப்பெருங்குடி மக்கள் தணலிட்ட தங்கம் போல உருகுகிறார்கள். அவர்கள் படும் துயரம் பற்றிய செய்தி தரணியெல்லாம் பரவுகின்றது. ஆனால் இங்குள்ள அரசினருக்கு ஏனோ எட்டவில்லை. விரைவில் இலங்கைத்தமிழர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை என் உள்ளத்தில் ஆழ்ந்து இடம்பெற்றிருக்கின்றது,"