ஈழத்து இலக்கிய வழி
இந்த கட்டுரை இலக்கிய வழி நூலில் யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சைவாசிரிய கலசாலையிலே 30 ஆண்டுகளாக சைவம் தமிழ் இரண்டையும் இரு கண்களென பேணி வளர்த்த பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வருங்காலத்தோர்க்காய் எழுதிய முன்னுரையாகும்.
தமிழ் நாட்டிலே தமிழ் வரலாறு அகத்தியரிலிருந்து தொடங்குகின்றது. ஈழநாட்டிலே தமிழ் இலக்கிய வரலாறு அரசகேசரியிலிருந்து தொடங்குகின்றது.ஆங்கிலேயரும் அவர்களுக்கு முன் ஒல்லாந்தரும் அவர்களின் முன் போர்த்துக்கீசரும் ஈழநாட்டை ஆண்டார்கள். இற்றைக்கு நானூறு வருடங்களிற்கு முன் அதாவது போர்த்துக்கீசருக்கு முன் ஈழநாட்டை தமிழரும் சிங்களவரும் ஆண்டு வந்தார்கள். யாழ்ப்பாணத்திலே தமிழரசாங்கம் நடைபெற்று வந்தது. ஆரியச் சக்கரவர்த்திகள் என்று பெயர் வைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்தை தமிழரசர்கள் நீண்டகாலம் பரம்பரை பரம்பரையாக ஆண்டு வந்தார்கள். பரராசசேகரன் என்ற தமிழரசன்காலம் சுட்டியுணரத்தக்க சிறப்பு வாய்ந்தது. அவனுக்கு உறவினன் செகராசசேகரன். மருகன் அரசகேசரி. இவர்கள் காலத்திலே யாழ்ப்பாணத்து நல்லூரிலே ஒரு தமிழ்ச்சங்கம் இருந்தது. நல்லூர் இராசதானி. சங்கத்திலே புலவர்கள் பலர் அங்கத்தவர்களாய் இருந்தார்கள். தமிழ் இலக்கண இலக்கியங்களே யன்றி சோதிடம் வைத்தியம் முதலியனவும் வேறுபல கலைத்துறைகளும் அந்தச் சங்கத்தால் வளர்க்கப்பட்டன.
நல்லூருக்கு அண்மையிலே நாயன்மார்கட்டு என்ற இடத்திலே வயல்களுக்கு மத்தியில் அழகியதொரு தாமரைத்தடாகம் இருக்கின்றது. அத்தடாகத்துக்கு தென்மேற்கு மூலையிலே ஒரு மேலடுக்கு மாளிகையில் அரசகேகரி வசித்து வந்தார். அவர் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மகாவித்துவான். தமிழிலே அவரியற்றிய இரகுவமிசம் என்ற காவியம் வடமொழியிலே காளிதாச மகாகவி இயற்றிய இரகுவமிசத்தின் மொழிபெயர்ப்பு. தமிழிரகுவமிசத்தை மேலே குறிப்பிட்ட மாளிகையிலிருந்து அரசகேசரி இயற்றினாரென்றும், நல்லூரிலுள்ள தமிழ்ச்சங்கத்திலே பரராசசேகரன் முன்னிலையில் அரங்கேற்றினார் எனவும்
கூறுவர்.
இந்த இரகுவமிசத்தை பரிசோதித்து அச்சிற் பதிப்பித்து வெளியிட்டவர் வித்துவசிரோமணி ந.ச. பொன்னம்பலப்பிள்ளை. அவர் அதனை பலருக்கு பாடம் சொல்லியும் வைத்தார்.
இரகுவமிசத்திலே அழகியனவுங் கடினமானவையுமான செய்யுள்களை தெரிந்து அவைகளை வடமொழி இரகுவமிசத்தோடு ஒப்பிட்டாராய்ந்து, அவற்றிற்கு ஒரு குறிப்புரையும் இயற்றி, இரகுவமிசக்கருப்பொருள் என்ற நூல் வெளியிட்டார் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர். இந்நூல் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழிலே தொடர்ந்து வெளிவந்தது.
வித்துவசிரோமணியையும் புலவரையும் தமது வித்தியா குரவர்களாக பெற்று, அவர்கள் வழியைத் தொடர்ந்தார் மகாவித்துவான் கணேசையர். ஐயர் அவர்கள் அரசகேசரி இயற்றி இரகுவமிசத்திற்கு ஒரு நல்லுரை கண்டிருக்கின்றார்கள்.
அரசகேசரியிலிருந்து நம் கண்முன்னிருந்த கணேசையர் பரியந்தம் ஓரிலக்கியவழி தொடர்ந்து வந்திருக்கின்றது என்பது ஊகிக்கத்தக்கது. இந்த வழி இடையிடையே செடிகொடிகளால் மறைந்து தொடர்பு புலப்படாது போனாலும், வழியொன்று எவ்வாறோ தொடர்புற்று வந்திருக்கின்றது என்பதற்குச் சான்றுகள் உண்டு.
அரசகேசரியிலிருந்து போர்த்துக்கீசர் காலம் முடிய ஒல்லாந்தர் காலம் வரை தமிழிலக்கிய வழி புலப்பாடிலதாயினும் ஆங்காங்கே புலவர்கள் தலைமறைவில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு பெருஞ்சான்றாக விளங்குகின்றார் சின்னத்தம்பிப்புலவர். அவர்காலம் இற்றைக்கு 240 வருடங்களுக்கு முந்தியது. தக்கதொரு இலக்கண இலக்கிய வழியிலே புலமை கனிந்த பரம்பரையைச் சேர்ந்தவர் சின்னத்தம்பிப்புலவர் என்பதனை அவரியற்றிய நூல்கள் கொண்டு சாதிக்கலாம். 'கல்லாமற் பாதி குலவித்தை' என்கின்ற பழமொழியும் ஒரு பரம்பரையின் ஆவசியகத்தை தெரிவிப்பதாயிருக்கின்றது.
மகாவித்துவசிரோரத்தினமாய் விளங்கியவரும், சொற்குற்றம் பொருட்குற்றம் முதலிய வழுக்களை நுண்ணிதின் ஆராய்ந்து தூய்மை செய்வதில் இணையற்றவரும், ஆதலினால் தோடஞ்ஞர் என்று பாராட்டப்பட்டவருமான சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர், தம் மாணவரின் கசடுகளை போக்கி, அவர்களை இலக்கிய இலக்கண வரம்பில் நடத்துவதற்கு முதலில் படிக்கும்படி வதிக்கும் புத்தகங்கள் இரண்டு. ஒன்று மறைசையந்தாதி், சின்னத்தம்பிப்புலவர் இயற்றியது. மற்றையது கலைசைச் சிலேடை வெண்பா. மறைசையந்தாதியிலே புலவருக்கு ஆராமை அதிகம். அதில் வரும் சொற்கள் தொடர்களை அடிக்கடி சொல்லி சொல்லிச் சுவைப்பார் புலவர். தோடஞ்ஞரான புலவர் அவர்கள் கொண்டாடுவதிலிருந்தே மறைசையந்தாதியி்ன் தமிழ்வரம்பு மரபு எத்தகையது என்பது உணரத்தக்கது. (தோடம் - தோசம், ஞர் - அறிபவர், ஆராய்பவர்). சின்னத்தம்பிப் புலவர் இயற்றிய பறாளை விநாயகர் பள்ளுச் சாதாரண நாட்டுப்பாடல்களின் வரிசையில் வைத்து மதிக்கற் பாலது போன்று கல்லாதாரையும் இனிக்கச் செய்வதொன்றாயினும், அதன் செந்தமிழ் வளம் வித்துவான்கள் கைகூப்பி வணங்கத்தக்க வகையில் அமைந்திருக்கின்றது.
இவ்வாறான புலமை, அரசகேசரியிலிருந்து தொடங்கித் தலைமறைவாக நடந்துவந்ததொரு இலக்கியவழி, அடங்காது கிளர்ந்தெழுந்ததோர் எழுச்சியன் பெறுபேறேயாம்.
சின்னத்தம்பிப் புலவர் காலத்திலே 'சிவராத்திரி புராணம்' இயற்றிய வரதபண்டிதர் சுன்னாகத்திலிருந்தவர். 'யாழ்ப்பாண வைபவம்', 'புலியூரந்தாதி' என்னும் நூல்களியற்றிய மயில்வாகனப்புலவர் மாதகலிலிருந்தவர். பண்டிதரும் புலவரும் நிறைந்த புலமையுடையவர்கள். தலைமறைவாயிருந்து வந்த இலக்கிய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அவர்கள் என்பதிற் சந்தேகமில்லை.
சின்னத்தம்பிப் புலவருக்குப் பிறகு ஒல்லாந்தர் காலம் முடிந்து ஆங்கிலேயர் காலத்திலுந் தொடக்க காலம் வரை இலக்கண இலக்கிய பரம்பரைவழி மறைவாயேயிருந்தது. ஆயினும் ஒல்லாந்தர் காலம் ஆங்கிலேயர் காலம் ஆகிய இரு காலங்களி்ன் பொருத்தத்திலும் இருந்தவர் முத்துக்குமார கவிராயர். இவர் உடுவிலையும் சுன்னாகத்தையும் சேர்ந்தவர். இவருடைய புலமை சந்தர்ப்ப விசேடத்தால் மணலில் மூடுண்டு மூழ்கிப்போகாமல் திடீரென்று வீறிட்டெழுந்து பிரவாகித்து விட்டது. இவரியற்றிய நீண்ட ஆசிரிய விருத்தங்கள் தாயுமானவரின் விருத்தங்களே என்று சொல்லத்தக்க வகையிற் சற்றேனும் எடைவிடாமற் செந்தமிழ் வளங்கொழித்து ஒழுகி வழிபவை. இவர் காலத்திலேயே இருபாலையில் இருந்தவர் சேனாதிராய முதலியார். சிறந்த புலமை கனிந்தவர் முதலியார்.
முத்துக்குமார கவிராயர், சேனாதிராய முதலியார் இருவரும் யாழ்ப்பாணத்தின் இரு கண்கள். தமிழ் வளர்ச்சி தமிழிலக்கண இலக்கியவழி ஆகிய இவைகளின் இருபெருந் தந்தையர்கள் இவர்கள். 'தக்கார்' என்று வள்ளுவனார் வாயூறுகின்ற வார்த்தைக்கு பாத்திரமாகும் வாய்ப்பு இவர்களுக்கு வாய்த்து விட்டது. இந்த நாட்டிலே எச்சத்தால் உயர்ந்து விட்டார்கள் இவர்கள். எச்சம்- சந்ததி, வழி.
சி. வை. தாமோதரம்பிள்ளையைத் தமிழ் தந்த தாமோதரம்பிள்ளை என்று தமிழ் உலகு தலைமேல் வைத்து கொண்டாடும்படி வைத்தவர் முத்துக்குமார கவிராயர். கவிராயரின் எச்சம் தாமோதரம்பிள்ளை. எச்சம் என்பது இங்கே மாணவர் எனும் பொருட்டு. மாணவரும் புத்திரரே. சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் கவிராயரின் உதிர பரம்பரையில் வந்தவர்.
கற்றோரும் மற்றோரும் இனிக்கத்தக்க வகையிற் செந்தமிழ் வசனநடையைத் தொடக்கிவைத்துச் செய்யுணடையிலிருந்து தமிழுக்கு மறுமலர்ச்சி செய்த பரோபகாரசீலர் சிறீலசிறீ ஆறுமுகநாவலர் அவர்கள். நாவலர், சேனாதிராய முதலியாரின் எச்சம், மாணவர்.
நாவலர், பிள்ளை ஆகிய இவர்கள் காலத்திலே வேறு வித்துவ பரம்பரைகளும் மறைவிலிருந்து வந்தன என்பதற்கு உதாரணமாக ஆங்காங்கே பலர் பிரகாசித்துக்கொண்டிருந்தார்கள். உடுப்பிட்டியிலே சிவசம்புப்புலவர் இருந்தார். அவர் மாணவர் முருகேசபண்டிதர். பண்டிதரின் மாணவர் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர். நீர்வேலியிலே சிவசங்கர பண்டிதர் இருந்தார். இவர் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் தருக்க சமய சாத்திரங்களிலும் மாமேதை. நாவலர் அவர்களுக்கு வலக்கரம்போலுதவியவர் இந்த சிவசங்கரபண்டிதர்.
சென்னை சர்வகலாசாலை தொடங்கியது 1850 இற்கு பிறகு. அதற்கு முன்னமே யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டையிலே செமினரி என்று வழங்கிய கல்லூரியிலே ஆங்கிலமுஞ் சாத்திர பாடங்களும் நன்கு கற்பிக்கப்பட்டன. அங்கே படிக்கப் புகுந்தவர்களுட் பலர் முன்னமே மறைவிலிருந்த தமிழ்ப்புலவர்களிடம் இலக்கண இலக்கியங்கள் முறையாகக் கற்றுத் தெளிந்தவர்கள். அவர்கள் தமிழ்மயமாயிருந்து கொண்டே ஆங்கிலமுஞ் சாத்திர பாடங்களுங் கற்றார்கள். ஆகையினாலே, இந்த நாட்டுக்கேயன்றித் தாய்நாட்டுக்கும் வழிகாட்டிகளாய் அவர்கள் விளங்கினார்கள். சி. வை. தாமோதரம்பிள்ளையின் தமிழ்த்தொண்டு பிரகாசிப்பதற்கு வட்டுக்கோட்டைப் படிப்பு உறுதுணை புரிந்தது.
மதுரைத்தமிழ்ச்சங்கத்தார் அச்சிட்ட தமிழகராதி, அகராதிகளுக்கு வழிகாட்டியாய், வித்துவான்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானது. ஒவ்வொரு சொல்லுந் தக்க பிரமாணங்கொண்டு தூய்மை செய்தது. இந்த அகராதியை ஆக்கியவர் நீதிபதி கதிரைவேற்பிள்ளை. இவர் சுன்னாகம் குமாரசாமிப்புலவர் தலைமையில் அறிஞர்கள் பலரின் உதவி கொண்டு இவ்வகராதியை ஒழுங்கு செய்தார். தமிழர் என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டவர் மல்லாகம் கனகசபைப்பிள்ளை. இந்நூல் தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு எழுதுபவர்களுக்கு அடிநிலையாய் உதவுவது. நியாயஇலக்கணஞ் செய்தார் வட்டுக்கோட்டை முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை. வீசகணிதம் செய்தார் சுதுமலை விசுவநாதபிள்ளை. இங்ஙனம் தமிழாக்கஞ் செய்தார் பலர்.
சி. வை. தாமோதரம்பிள்ளைதான் டாக்டர் சாமிநாதையரின் பழந்தமிழ்த்தொண்டுக்கு வழிகாட்டி. 1885 இல் தொல்காப்பியம் தாமோதரம்பிள்ளை பதிப்பு முழுவதும் உரையுடன் வெளிவந்துவிட்டது. 'இலக்கண விளக்கம்' , 'வீரசோழியம்' , 'இறையனார் களவியல்' முதலியன அதற்குமுன்னமே தாமோதரம்பிள்ளை பதித்து விட்டார். 1885க்குப் பிறகு கற்றறிந்தோரேத்துங் கலித்தொகையை அச்சிடுகிற காலத்திலேதான், தாமோதரம்பிள்ளையைத் தொடர்ந்து அவருடன் பழகி அவர் தூண்டுதலாற் சாமிநாதையர் பதிக்கத் தொடங்கினார். ஐயர் அவர்களின் முதற்பதிப்பு சீவகசிந்தாமணி. 1887ம் ஆண்டிற் பதித்தது.
தாமோதரம்பிள்ளையின் சேனாவரையப்பதிப்பு வெளிவந்தது 1868ம் ஆண்டில். அப்பொழுது சென்னைப்புலவர் சிலருக்கு ஒருவகைக் கொதிப்பு உண்டாயது. அவர்கள் திரைமறைவிலிருந்து ஒருவரைத் தூண்டித் தாமோதரம்பிள்ளையைத் தூறறிக் கண்டனப்பத்திரிகைகள் விடுத்தார்கள். அதனைக்கண்ட ஆறுமுக நாவலர் அவர்கள் 'நல்லறிவுச்சுடர் கொளுத்தல்' என்ற துண்டுப் புத்தகத்தை வெளியிட்டு்த் தாமோதரம்பிள்ளைக்கு ஊக்கம் அளிததார்கள். அப்புத்தகத்தில் உள்ள சில வசனங்கள் ஈண்டு ஞாபகப்படுத்தத்தக்கவை.
"இச் சென்னை சர்வகலாசாலையிலே தலைமைத் தமிழ் வித்தியா போதகராயுள்ள கனம்பொருந்திய பார்சிவல் துரை யாழ்ப்பாணத்திலே தமிழ் கற்றுக்கொண்டவர். சென்னை நார்மஸ்கூலில் தமிழ் வித்தியா போதகராய் முன்னிருந்த மாசிறீ செளந்தரநாயகம் பி்ள்ளை அவர்களும் இப்போதிருக்கிற மாசிறீ வேலுப்பிள்ளை அவர்களும் யாழ்ப்பாணத்தவர்கள். இங்கிலீசினின்றுந் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழ் நாடெங்குமுள்ள கெவர்மென்ட் பாடசாலைகளெங்கும் வழங்குந் தமிழ்ப் புத்தகங்களுக்கு ஆசிரியராகிய மாசிறீ விசுவநாதபிள்ளை யாழ்ப்பாணத்தவர்.
தமிழிலே ஹேமாத்திரிகற்பம், இரகுவமிசம், இராமேசர்பிள்ளைவிடுதூதூ, செகராசசேகரம், பரராசசேகரம், அமுதசாகரம், தக்சிணகைலாச புராணம், சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம், பரகிதம், புலியூர்யமகவந்தாதி, கல்வளையமகவந்தாதி, மறைசையந்தாதி, திருவண்ணைக்குறவஞ்சி, திருமாவைக்குறவஞ்சி, திருநாகைக் குறவஞ்சி, திருநல்லைக் குறவஞ்சி, திருநல்லைக் கிள்ளைவிடு தூது, திருநல்லை வெண்பா, திருநல்லையந்தாதி, வேதாந்த செயஞ்சோதி, நியாயலக்கணம், வீசகணிதம், விரிவகராதி முதலியன யாழ்ப்பாணத்தாராற் செய்யப்பட்டன.
மதுரைச்சங்கத்தும், புதுவைச்சங்கத்தும், சென்னைச்சங்கத்தும் தமிழ்த் தலைமைப் புலமை நடாத்திய களத்தூர் வேதகிரி முதலியார் 'உதயதாரகை'ப் பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்திய 'யாழ்ப்பாணச் சிறப்பு' என்னுங் கடிதத்தில் பிற பாசை கலவாது சுத்தச் செந்தமிழ் பேசுவோர் யாழ்ப்பாணத்தார்களே யெனவும் மற்றைத் தேசத்தார்களெல்லோரும் தமிழோடு பல பாசையும் கலந்து பேசுகின்றார்களெனவுங் கூறியிருக்கின்றார்.
சிதம்பரத்திலே ஞானப்பிரகாசம் எனுங் குளஞ்செய்தவித்தவரும், சமஸ்கிருதத்திலே பெளஷ்கராகம விருத்தி, சிவஞானபோதவிருத்தி, சித்தாந்த சிகாமணி, பிரமாண தீபிகை, பிரசாத தீபிகை, அஞ்ஞான விவேசனம், சிவயோகசாரம், சிவயோகரத்நம், சிவாகமாதி மகான்மிய சங்கிரகம் என்பவைகளையும், தமிழிலே சிவஞானசித்தியாருக்கு ஓருரையும் இயற்றினவரும், திருவண்ணாமலை யாதீனத்திற் பலருக்குச் சைவாகமோபதேசஞ் செய்தருளியவருமாகிய சிறீ ஞானப்பிரகாச முனிவர் யாழ்ப்பாணத்தவர்."
இவை நாவலர் எழுதியவை.
நாவலர் அவர்களை, 'தமிழ்நாடு முழுவதும் இணையில்லாதவர்' என்று, தாமோதரம்பிள்ளை எழுதியிருக்கின்றார். தமிழுக்குஞ் சமயத்துக்கும் உறையுளாய் அக்காலத்திலிருந்த திருவாடுதுறையாதீனம் முதலிய ஆதீனங்களும், தமிழை வளர்த்த இராமநாதபுர சமஸ்தானமும் நாவலர் அவர்களைப் பொன்னேபோற் போற்றியதை யாவரும் அறிவர்.
கற்றுணர் புலவ ருட்களிக்கும்
முற்றுண ராறுமுக நாவலனே
என்று மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களும்,
என்னுளங் குடிகொண் டிருக்கும்
முன்னுசீ ராறுமுக நாவலனே
என்று பிள்ளையின் தலைமாணவரான தியாகராச செட்டியார் அவர்களும் நாவலர் அவர்களை போற்றினார்கள்.
நாவலர் அவர்களுக்குப் பிறகு அவர் மாணவரான கோப்பாய் சபாபதி நாவலர் மதங்கொண்ட களிற்று யானைபோலத் தமிழ்நாடு முழுவதிலும் தமக்கிணையின்றித் திக்கு விஜயஞ் செய்து செந்தமிழ் மழை பொழிந்தார். அவரியற்றிய 'திராவிடப் பிரகாசிகை' யின் மிடுக்கு பதிற்றுப்பத்து என்கின்ற சங்கப்பாட்டின் மிடுக்கோடு ஒப்பிடத்தக்கது.
நாவலரின் மாணவரில் ஒருவர் காசிவாசி செந்திநாதையர். தமிழுக்குச் சாமிநாதையர் போலச் சித்தாந்தத்துக்குச் செந்திநாதையர் என்று பாராட்டும்படி அவர் திகழ்ந்தார். அவரியற்றிய நூல்கள் பல. நாவலர் வழியின் வழியில் வந்த நா. கதிரைவேற்பிள்ளை மாயாவாததும்சகோளரி சதாவதானி. திரு. வி. கலியாணசுந்தர முதலியாரின் கணீர் என்ற பேச்சுத் தமிழுக்குக் கதிரைவேற்பிள்ளை தந்தை.
அரசகேசரியில் இருந்து தொடங்கிய இலக்கிய வழி சின்னத்தம்பிப் புலவரூடாக நடந்து, முத்துக்குமார கவிராயர் சேனாதிராய முதலியார் என்கின்ற இரு கிளைகளாய், எச்சங்களாலுயர்ந்து, வழிவழி சிறந்து வளர்ந்து வந்த வரலாறு ஒருவாறு காட்டப்பட்டது. சிறிய கிளைகளும் கிளைகளின் கிளைகளும் பல.
தெல்லிப்பழை வித்துவான் சிவானந்தையரும் திருநெல்வேலித் தர்க்க குடார தாலுதாரி தம்பு என்பவரும் விவேகத்திற் சோழவந்தான் சண்முகம்பிள்ளைக்கு இளைத்தவரேயல்லர். 'இராமநாத மான்மியம்', 'அருணாசல மான்மியம்', 'இலங்கை மான்மியம்' என்கின்ற நூல்களியற்றிய சாவகச்சேரிப்புலவர் பொன்னம்பலப்பிள்ளையும், அளவெட்டியிற் சத்தா என வழங்கும் சற்குணசிங்கமும் புராணங்கள் காவியங்கள் இயற்றவல்ல செந்தமிழ்ச் செல்வர்கள். இன்னும் குடத்துள் விளக்கம் போலிருந்து போனவர் பலர்.
கவிதையுலகிற் சின்னத்தம்பிப்புலவர், முத்துக்குமார கவிராயர், சேனாதிராய முதலியார், சிவசம்புப்புலவர், நவாலியூர் சோமசுந்தரப்புலவர் ஐவரும் யாழ்ப்பாணத்தின் பஞ்சரத்தினங்கள்.
யாழ்ப்பாணத்திலே தமிழ்வளங்கும் ஈழமண்டலமனைத்தும் அடங்கும். வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்களும் திருகோணமலை மட்டக்களப்பு எனும் இடங்களில் உள்ளவர்களும் இனத்தாலும் கல்வியாலும் யாழ்ப்பாணத் தொடர்புள்ளவர்களே. சுவாமி விபுலானந்தர் அவர்கள் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என்கின்ற வேற்றுமையின்றி யாழ்ப்பாணத்தவராயே வாழ்ந்தார்கள்.
இலக்கியவழியிற் சுவாமிகளின் பங்கு மிகப்பெரியது. சுவாமிகளின் செய்யுள்கள் அனைத்துந் தொகுத்து நீண்டதொரு விமரிசனஞ் செய்தல் வேண்டும். சுவாமிகளியற்றிய வெள்ளைநிற மல்லிகை என்ற பாட்டு தேசிய விநாயகம்பிள்ளையின் அம்மா வென்குது வெள்ளைப்பசு என்பதனோ டொப்பிடத்தக்கது. அதன் தத்துவக் கருத்து பாரதியாரின் தின்னப் பழங்கொண்டு தருவான் என்கின்ற கண்ணன் பாட்டை ஊடுருவுகின்றது. அஞ்சினார்க்கு சதமரணம் என்கின்ற குறள் வெண்செந்துறை வீரம்கொப்பளிக்கின்றது. அது மனோன்மணீயஞ் சுந்தரம்பிள்ளையின் சிவகாமி சரிதையோடொப்பிடற் பாலது. சுவர்க்க நீக்கப் பாடல் பாரதியாரின் குயிலேதான் என்று சொல்லத்தக்கது. 'தாழ்ந்து மென்மொழி பகரந்திடேல்' என்கின்ற கம்பீரமான பாட்டு - யூலியசீசர் கூற்றாய் வருவது, சீவகசிந்தாமணி பாடல்களோடு ஒப்பிடத்தக்கது. 'துருவன் அனையன் ஒருவனீங் குளனால்' என்ற சீசரின் தலையெடுப்பான கூற்று புறநானூற்று வரிசையை சேர்ந்தது. இவ்வாறே 'சிலப்பதிகார' த்தில் வரும் இனிய பாடல்கள் கலித்தொகைப்பாடல்கள் என்றிவைகளின் வரிசையில் வைத்து சுவைத்தற்குரிய சுவாமிகளின் பாடல்கள் எண்ணில. மட்டக்களப்பு வாவியின் மீன்பாடல் அழியாநிலை படைத்தது. இவ்வாற்றால் இலக்கியவழி சுவாமிகளை அணுகிய வழிப் புத்தம்புதியதொரு வழியாய் கீழிருந்து மேலே மெல்லென உயர்ந்து வீரங்கிளர்ந்து செல்வதனைக்காணலாம். அதனைச் சொல்லுவதொரு தனித்த விமரிசன நூல் மிகமிக இன்றியமையாதது.
ஈழமண்டலத்தின் இலக்கிய வழியிலே ஒழுகி வழிந்த இரசனைப்பெருக்கு ஒய்யாரமாய் எழுந்த விளையாடிய மலையடுக்கங்களுள் உயர்ந்து விளங்குவதோர் இராசசிகரம், நாவலர் அவர்களின் மருகரும் மாணாக்கருமாகிய பொன்னம்பலபிள்ளையே யாவார். அவரைப் 'பொன்னம்பலப் பெயர்ப் புட்கலாவர்த்தம்' என்று வர்ணிக்கின்றார் அவருடைய தலைசிறந்த மாணவரும் புலவருமான ஒருவர். புட்கலாவர்த்தம் - பொன்மழை பொழியும் மேகம்.
இப்புத்தகம் பொன்னம்பலப்பிள்ளையை மத்தியாக வைத்து அவர் காலத்து சிவசம்புப் புலவரையும் அதற்கு முன் சின்னத்தம்பிப்புலவர் பரியந்தமானவர்களையும் சிவசம்புப் புலவருக்குப் பின் நமது காலத்திலிருந்த சோமசுந்தரப்புலவர் மகாலிங்கசிவம் என்பவர்களையும் இலக்கியவழி ஊடுருவி நடப்பதை ஒருவாரு சுட்டிக்காட்டுவது. இவ்வாற்றால் ஈழமண்டலத்தின் இலக்கியப்புதையல் உற்று நோக்கத்தக்கது.
ஈழமண்டலம் தாய்நாடாகிய தமிழ்நாட்டின் ஒரு சிறுதுளி. தமிழ்நாட்டின் இலக்கியவளம் மகாசமுத்திரம். ஈழமண்டலத்திலக்கியவழி அந்த மகாசமுத்திரத்திற் சென்று சேராதாயின் நின்று வற்றி விடும். ஆகையினாலே இரட்டையர், காளமேகம், புகழேந்தி என்று தொடங்கிச் சிவகாமி சரிதைக்கு வந்து பின் மேலே எழுந்து கம்பரிலே சற்றுநேரந் தரித்துத் திருவள்ளுவரை வணங்கி நல்வாழ்வு பெற்றுக் கற்றோரேற்றும் கலித்தொகையைத் தீண்டி முற்றுகின்றது 'இலக்கிய வழி' எனப் பெயரிய இப்புத்தகம்.
பொதுவாகத் தமிழ் இலக்கிய வளர்ச்சியை நாடுவார்க்குஞ் சிறப்பாக ஈழமண்டலத்தின் இலக்கிய வளர்ச்சியை அறியலுறுவார்க்கும் இப்புத்தகம் உபயோகப்படும். இதற்கெழுதிய இரசனைக்குறிப்பையும் இலக்கிய வழியின் எச்சமாய் எஞ்சிய பகுதியைச் சிறிதே பூர்த்தி செய்யும்.
திருகோணமலை கனகசுந்தரம்பிள்ளை அவர்களும் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் அவர்களும் ஒருதாய் வயிற்றில் ஒருங்கு பிறவாத இரட்டையர்கள். அவர்கள் தமிழிலக்கண இலக்கிய வழியிற் செய்த சேவை அதிகம். தாய்நாட்டிலே பழைய நூலுரைகள் பதித்தவர்களுக்கெல்லாம் ஊன்றுகோலாய் உதவியவர்கள், கனகசுந்தரம்பிள்ளை அவர்கள்.
குமாரசுவாமிப் புலவர் அவர்கள் செய்த 'தமிழ்ப்புலவர் சரித்திர'மும் அவர்களுக்கு முன் சதாசிவம்பிள்ளை இயற்றிய 'பாவலர் சரித்திர தீபமும்' புலவர் அவர்களுக்கு பின் மட்டக்களப்பு பூபாலபிள்ளை இயற்றிய 'தமிழ் வரலாறு' ம் படித்து, இந்த இலக்கிய வழி விரிவு செய்யற்பாலது.
இலக்கிய வழியிற் செல்பவர்கள், இலக்கியத்தினியல்பை யுணர்வது இன்றியமையாததாதலின், அவ்வழி மேலும் நடந்து, தமிழ் தந்த தாமோதரம்பிள்ளையை ஊடுருவி, இலக்கியத்தின் உயிரும் உடலிலும் சென்று முற்றுவதாயிற்று.
வருங்காலத் தமிழிலக்கிய உலகம் முந்தையோர் தந்த இலக்கிய வழியை மறந்து போகாமல் ஞாபகப்படுத்தவும், மேலும் வளர்ச்சிவழி வகுப்பதற்குத் தொடர்பு காணவும் உதவும் என்ற கருத்தால் இந்த முன்னுரை வளர்ந்திருக்கின்றது.
இலக்கிய வழி வளர்க, வாழ்க.