வரதர் ஐயாவின் புதிய முயற்சி
ஈழத்து இலக்கிய உலகில் படைப்பாளியாயும் பதிப்பாளியாயும் அறியப்பட்ட வரதர் ஐயா தனது 82 வது வயதிலும் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார். அவருடைய வீட்டிற்கு நேற்றிரவு சென்றிருந்தபோது (ஊரடங்கு இருந்தபோதும்) அதனை காண நேரிட்டது. அறிவுக்களஞ்சிய நூல்வரிசை என்ற பெயரில் சிறிய புத்தகங்களை பதிப்பிக்க தொடங்கியுள்ளார். நான்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டுவிட்டாலும் தற்போதய சூழ்நிலைகாரணமாக வெளிவிடப்படவில்லை. இது சம்பந்தமாக சிறிது கவலையாகவே உள்ளார். இந்நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விடயம் பற்றி ஓரளவு விரிவாக எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணதேசம், பூதத்தம்பி, கிரண்பேடி, மனிதர்களின் தேவைகள் என்ற தலைப்புகளில் முதல் நான்கு புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளன. இதில் யாழ்ப்பாணதேசம் மற்றும் பூதத்தம்பி இரண்டும் கலாநிதி க. குணராசாவினாலும் மனிதர்களின் தேவைகள் சாமிஜியினாலும் கிரண்பேடி கிருஸ்ணனாலும் எழுதப்பட்டுள்ளன. இன்றைய சிறுவர்களிற்கு பொதுஅறிவை வளர்க்கும் நோக்கில் எழுந்துள்ள இந்த அறிவுக்களஞ்சிய நூல்வரிசை வெளியிடப்பட்டு தொடர்ந்து வரவேண்டும் என்பதில் வரதர் ஐயா மிக்க ஆவலாயுள்ளார். இன்றைய காலம் நிலைமை என்ன சொல்கிறதோ தெரியவில்லை.