வனுவாத்
நானும் என்ர நண்பருமா உலகத்தை சுத்தி பாரத்துக்கொண்டு வரேக்க (பெரிசா யோசிக்காதங்கோ Google earth இல) நண்பர் கேட்டார் வனுவாத் இருக்கோ பாருங்கோ எண்டு. நான் சொன்னன் இதில நாடுகளை பாக்கலாம் ஆனா அங்க விக்கிற சாப்பாடுகளை பாக்கேலா எண்டு. அவர் சொன்னார் இல்லையில்லை என்னோட அந்த நாட்டுக்காரர் ஒருவர் படிச்சவர் எண்டு (இவர் சீனாவில படிச்சவர்). சுத்திக்கித்தி நாட்டைக் கண்டு பிடிச்சு கிட்டப்போனா பெரிசா சன நடமாட்டத்தை காணேல்ல. உடன விக்கிப்பீடியாக்கு ஓடிப்போய் பாத்தா ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம். வாசிச்சு நீங்களும் ஆச்சரியப்படுங்கோ...
பெயர் : வனுவாத் குடியரசு
அமைவிடம் : பசுபிக் பெருங்கடலில் அவுஸ்திரேலியாவுக்கு 1750 கிமீ கிழக்காயும், நியூ கலிடோனியாவுக்கு 500 கிமீ வடகிழக்காயும் விஜிக்கு மேற்காயும் சொலமன் தீவக்கு தெற்காயும் அமைந்துள்ளது.
தரைத்தோற்றம் : 83 தீவுகளை கொண்டதாக இந்நாடு அமைந்துள்ளது. இதில் 14 தீவுகள் 100 சதுர கிலோமீற்றரை விட பெரிய பரப்பளவை கொண்டவை. இங்கு பெரும்பாலான தீவுகள் மலைப்பாங்காயும் எரிமலைகளை அடிப்படையாக கொண்டவையாகவும் உள்ளன. இன்றும் இங்கு பல எரிமலைகள் உயிரோடு உள்ளன.
பொருளாதாரம் : பெரும்பாலான மக்கள் (65 வீதம்) சிறிய அளவிலான விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள். சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடித்துறையும் இங்கு முக்கியத்துவம் வாயந்தது. முக்கியமான விடயம் என்னவெனில் இங்கு வருமான வரி உட்பட எந்த விதமான வரிகளும் அறவிடப்படுவதில்லை.
மக்கள் : மொத்த மக்கள் தொகை 205,754 (ஆடி 2005). ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் பிஸ்லாமா ஆகிய மொழிகள் அரச மொழிகளாக உள்ளன. இதைவிட நூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் இங்கு பேசப்படுகின்றன. மொழி அடர்த்தி வேறெந்த நாட்டையும் விட இந்நாட்டில்தான் அதிகம் (2000 பேருக்கு ஒரு மொழி). அனைத்து மக்களும் கிறீத்தவ மதத்தை பின்பற்றுகிறார்கள்.
2006 ம் ஆண்டு மனிதர் வாழ்வதற்கு மிகவும் மகிழ்ச்சியான நாடாக வேறெந்த நாட்டையும் விட வனுவாத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நாட்டிலுள்ள
தொலைபேசிகள் எண்ணிக்கை - 6800 (2004)
கைப்பேசிகள் எண்ணிக்கை - 10500 (2004)
தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை - 2000 (1997)
இரயில் சேவை இல்லை
விமான நிலையங்கள் - 32
இராவத்தின் எண்ணிக்கை காவல்த்துறை உள்ளடங்கலாக - 300.
நுட்பம் - 2006
கொழும்பு மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தின் ஆண்டு மலராக நுட்பம் வெளிவந்திருக்கினறது. உபயம் நண்பன் கேதாரசர்மா (புடவை முகாமைத்துவ மாணவன் - மொரட்டுவ பல்கலைக்கழகம்) ஆனால் நான் வாசிப்பதற்கு மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது வேறு விடயம். வெளியீட்டு விழாவிற்கு போக முடியாத குறை வாசித்த போது இன்னும் அதிகமாகியது. தமிழருவியும் சடகோபனும் தங்கள் பிரிவுகளை ஆய்வுசெய்ததாக அறியக்கிடைத்தது.
மலைபோல் இடர்வரினும் தலைநிமிர்ந்து நிற்போம் நாங்களும் - எங்கள் கலைகளும் எம் பனைகளைப்போலவே..உள்அட்டையில் பனையின் அழகிய படத்தின்கீழே காணப்பட்ட அழகிய சிறுகவிதை. ஏதோ சொல்கிறது. படமும் கவிதையும்.
ஒவ்வொரு ஆக்கங்களுக்கும் கீழே பின்னூட்டல்களுக்காக எழுதியவர்களின் மின்னஞ்சல் தரப்பட்டிருந்தமை ஒரு ஆரோக்கியமான விடயம் என நினைக்கின்றேன்.
நாடறிந்த எழுத்தாளர் சாந்தனின் தேடல் குறுநாவல் (முன்னமே பிரசுரமானது) மீள் பிரசுரம் பண்ணப்பட்டிருந்தது கவிதைகள் கட்டுரைகள் நல்ல சிறுகதைகள் எல்லாம் நல்ல தரமாய்.
மொழிபெயர்ப்பு கவிதை ஒன்றும் வாசிக்க நேர்ந்தது. மனித நேயம் பற்றி ஆன் ரணசிங்கேயின் கவிதை மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. ஆங்கில இலக்கியம் படித்தபோது கஸ்டப்பட்டு படித்தது என்பதனால் உடன் நினைவுக்கு வந்தது. வரிக்கு வரி மொழிமாற்றம் நடந்திருந்தது இதனால் இலக்கிய சுவை கொஞ்சம் கெட்டிருந்தது. முதல் முயற்சியோ தெரியவில்லை ஆனால் தமிழுக்கு நல்ல ஆரோக்கியமான முயற்சி.
யுனிகோடு நியமமும் மொழி அடிப்படைகளும் என்ற கட்டுரை மிக நன்றாக தொகுக்கப்பட்டு எழுதப்பட்டிருந்தது, இருந்தாலும் ஆடி 2006 இல் வெளியிடப்பட்ட யுனிகோடு 5.0 பற்றியும் TSCII பற்றியும் எழுதியிருக்கலாம்.
புத்தகங்கள்.... புத்தகங்கள்......
கொழும்பு புத்தகச் சந்தைக்கு போனனான் எண்டு சொன்னனான் எல்லோ. அங்க வாங்கின புத்தகங்களின்ர விபரத்தை தந்திருக்கிறன். இதை வாசிச்சுப்போட்டு நான் என்ன விதமான வாசகன் எண்டு நீங்கள் யாராவது சொன்னால் குலுக்கல் முறையில முதல் பரிசு பெறுகிற ஆளுக்கு ஒரு
இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான அப்பிள் நோட்புக் கணனியின்ர
படம் பரிசாக தரப்படும்.
- உ. வே. சா - பன்முக ஆளுமையின் பேருருவம் தொகுப்பு பெருமாள் முருகன் - காலச்சுவடு பதிப்பகம்
- காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள் - ஒரு ஆவணத்தொகுப்பு - வண்ணைதெய்வம் - மணிமேகலை பிரசுரம்
- ஜே. கிருஷ்ணமூர்த்தி (புனிதமான வாழ்க்கை வரலாறு) - என். ஸி. அனந்தாச்சாரி - அறிவாலயம் பிரசுரம்
- மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - மதன் - விகடன் பிரசுரம்
- மண்ணில் தொலைந்த மனது தேடி... - சடகோபன் - தேசிய கலை இலக்கிய பேரவை வெளியீடு
- நெருப்பு மலர்கள் - ஞானி - விகடன் பிரசுரம்
- பிரச்சனை பூமிகள் - உலக சரித்திரம் உள்ளங்கையில் - ஜி.எஸ்.எஸ். - விகடன் பிரசுரம்
- ஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு - பரிமளம் சுந்தர் - கரோன் நீரோன் பதிப்பகம்
- தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் - ஓஷோ - கவிதா வெளியீடு
- ஒளியின் மழலைகள் - கவிதைத்தொகுப்பு 1, 2 - தவ சஜிதரன்
- முரண்பாட்டு நிலைமாற்றம் பற்றிய வளப்பொதி - இன்பக்ட்
- Reflection and mobilization - Ananta kumar giri - Sage publications
- The funniest jokes in the world - Compiled by H. O. Shourie
- Macromedia Flash @ work - Phillip kerman - sAms
- Advanced digital photography - Tom ang
- Teach your child how to think - Edward de Bone
- Computer active magazine - September issue
- IT times magazine - Aug/Sep issue
புத்தகச்சந்தை
கொழும்பு புத்தகச் சந்தையும் கண்காட்சியும் இந்த மாதம் 16ம் திகதி தொடக்கம் ஒரு கிழமை மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. வழமைபோல ஒரு தொகை புத்தகங்கள் வாங்கின சந்தோசம். இருந்தாலும் ஒரு கவலை கனக்க புத்தகம் வாங்கமுடியாமப் போச்சு. வேறென்ன காசு காணது. அதைவிடுவம். பிறகு ஆறுதலா வாங்கின புத்தகங்களின்ர விபரம் தாறன். முதல்ல புத்தகச்சந்தை விபரம். 440 புத்தகக் கடைகள். குறைஞ்சது 1 மில்லியன் புத்தகத் தலைப்புகள். போன வருசம் 3 மில்லியன் புத்தகம் வித்ததாயும் இந்த வருசம் கொஞ்சம் கூடும் எண்டும் அடிக்கடி அறிவிச்சுக் கொண்டு இருந்தார்கள். உண்மையோ போய்யோ தெரியேல்லை எண்டாலும் தினமும் மண்டபம் நிறைஞ்ச காட்சிகள் தான். அனேகமா எல்லாரும் ஒரு புத்தகம் எண்டாலும் கொண்டு போனவை தான்.
2004 இல சடகோபன் வெளியிட்ட கவிதைத்தொகுப்பு ஒண்டும் வாங்கினான் முந்தியே நூல்நிலையத்திலை கண்டது இப்பதான் வாங்கக் கிடைச்சுது. நல்லா இருந்துது. சிவத்தம்பி ஐயாவோட முன்னுரையோட ஒரு சின்னத் துண்டு உதாரணத்துக்கு.
நண்பா..
வடலிப்பனையும்
கடலைப்பொடியும்
பொலிந்த தேசமதில்....
விடியல் வெள்ளி பிடிக்கவென்று
விடலைப்பெடியன் படலை தாண்டிய காலமிது.
புத்தக விபரம்மண்ணில் தொலைந்த மனதைத் தேடி........
கவிதைத் தொகுப்புதேசிய கலை இலக்கிய பேரவை வெளியீடு.
நல்லா இருந்தா காசு குடுத்து வாங்கி வாசியுங்கோ (வழமைபோல).
-------------------------------------------------
நேற்று ஒரு பகடி வாச்சனான் அதையும் சொல்லுறன். உண்மையோ தெரியேல்ல
All the women has seven ages : Baby , Child, Girl, Young woman, Young woman, Young woman, Young woman.
என்ன அலட்டலாம்.......
இந்தப்பதிவுத்தளத்தை தொடங்குறதுக்கு கனகாலம் முன்னமே "மக்றோமீடியா பிளாஸ்" பற்றி ஒரு பதிவுத்தளம் தொடங்கவேணும் எண்டு நினைச்சிருந்தனான். பிறகு கொஞ்சக்காலம் செல்ல என்ர புகைப்படங்களைச் சேர்த்து ஒரு பதிவுத்தளத்துக்கும் அத்திவாரம் போட்டனான். இருந்தாலும் அதுகும் யோசிச்சதோட போயிற்றுது. பிறகு நான் வாசிக்கிற புத்தகங்களைபப்பற்றி ஏதாவது எங்கயாவது எழுதுவம் எண்டும் யோசிச்சன். அதுகும் நல்ல யோசனையாவே போயிட்டுது. இருந்தாலும் மற்றதுகள் மாதிரியே இதுகும் "வியூச்சர் பிளான்" எண்டு விட்டுட்டன். சரி இப்ப ஏதோ ஒரு இடம் கிடைச்சிருக்கு பாப்பம் எல்லாத்தையும் ஒரே இடத்தில கொட்டுவம். இருந்தாலும் யாழப்பாணம் போனாத்தான் கணனியில கிடக்கிற புகைப்படங்களை எடுக்கலாம். அதுவரைக்கும் நெஞ்சில் நின்றவை எண்டு ஏதாவது அலட்டுவம் எண்டு நினைக்கிறன்
பெயர் வைத்த கதை ???
இது ஒண்டும் பெரிய கதையில்லை எண்டாலும் இந்த ஊரோடி எண்ட பெயர் என்னெண்டு வந்ததெண்டு சொல்லத்தானே வேணும். முதல்ல தெரிஞ்சது தெரியாததெண்டு எல்லா விசயத்தையும் பற்றி அலட்டுறதுதானே நாடோடி எண்டு வைப்பம் எண்டு தான் இருந்தனான். ஆனா நானெங்க நாடு நாடாப் போனனான். இடம்பெயர்ந்து ஊரூராத்தானே போனனான் அதுதான் ஊரோடி எண்டு வச்சனான். இன்னொரு காரணமும் இருக்கு பிறகொருமுறை சொல்லுறன்.
இப்ப ஒரு சிறுகவிதை எப்பவோ வசிச்சது. ஆனந்த விகடனோ குமுதமோ தெரியேல்ல
பசிஅவனுக்கு உடம்பில்அவளுக்கு வயிற்றில்பரிமாறிக்கொண்டார்கள்.
பிறந்த கதை
ஊரோடி - பெரிதாக ஒன்றும் யோசிக்காமலேயே இருக்கிற நேரத்தில ஏதாவது அலட்டுவம் என்டு தான் பதியத் தொடங்கியிருக்கிறன். சயந்தன்ர பதிவுகள் தான் இதை தொடங்கத் தூண்டினது. இருந்தாலும் வழமையா எந்த விசயம் எண்டாலும் இழுத்தடிக்கிறனான் இதைமட்டும் ஏனோ படுவேகமா செய்திட்டன். அரைவாசியில் விடப்போறனோ தெரியேல்லை. காலம் நிலைமை எல்லாம் யாழ்ப்பாணத்திலை ஓரளவுக்கெண்டான்ன சரியா இருந்தா தொடர்ந்தும் ஏதாவது அலட்டுவன் எண்டுதான் நினைக்கிறன். இன்னும் தமிழை ரைப் பண்ண ஒரு வசதியும் செய்யேல்ல இப்பயும் சுராதான்ர புதுவையைத்தான் பவிச்சு எழுதுறன். விரைவில அதுக்கும் ஒரு வழிசெய்திருவன் எண்டுதான் நினைக்கிறன். தமிழ்மணம் வலைத்தளத்தில இருந்து இந்த ரெம்பிளற்றை எடுத்தனான். சின்ன மாற்றங்கள்தான். மேலும் மேம்படுத்த யோசிக்கிறன். யாழ்ப்பாணம் போய் என்ர கணனியிலை இருந்தாத்தான் சரிவரும். இப்ப இந்த கொழும்பில அகப்பட்டு நிக்கிறது சரியான கஸ்டமாக் கிடக்கு. தயவு பண்ணி ஏதாவது குறிப்புகள் போடுங்கோ.