நானும் என்ர நண்பருமா உலகத்தை சுத்தி பாரத்துக்கொண்டு வரேக்க (பெரிசா யோசிக்காதங்கோ Google earth இல) நண்பர் கேட்டார் வனுவாத் இருக்கோ பாருங்கோ எண்டு. நான் சொன்னன் இதில நாடுகளை பாக்கலாம் ஆனா அங்க விக்கிற சாப்பாடுகளை பாக்கேலா எண்டு. அவர் சொன்னார் இல்லையில்லை என்னோட அந்த நாட்டுக்காரர் ஒருவர் படிச்சவர் எண்டு (இவர் சீனாவில படிச்சவர்). சுத்திக்கித்தி நாட்டைக் கண்டு பிடிச்சு கிட்டப்போனா பெரிசா சன நடமாட்டத்தை காணேல்ல. உடன விக்கிப்பீடியாக்கு ஓடிப்போய் பாத்தா ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம். வாசிச்சு நீங்களும் ஆச்சரியப்படுங்கோ...
பெயர் : வனுவாத் குடியரசு
அமைவிடம் : பசுபிக் பெருங்கடலில் அவுஸ்திரேலியாவுக்கு 1750 கிமீ கிழக்காயும், நியூ கலிடோனியாவுக்கு 500 கிமீ வடகிழக்காயும் விஜிக்கு மேற்காயும் சொலமன் தீவக்கு தெற்காயும் அமைந்துள்ளது.
தரைத்தோற்றம் : 83 தீவுகளை கொண்டதாக இந்நாடு அமைந்துள்ளது. இதில் 14 தீவுகள் 100 சதுர கிலோமீற்றரை விட பெரிய பரப்பளவை கொண்டவை. இங்கு பெரும்பாலான தீவுகள் மலைப்பாங்காயும் எரிமலைகளை அடிப்படையாக கொண்டவையாகவும் உள்ளன. இன்றும் இங்கு பல எரிமலைகள் உயிரோடு உள்ளன.
பொருளாதாரம் : பெரும்பாலான மக்கள் (65 வீதம்) சிறிய அளவிலான விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள். சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடித்துறையும் இங்கு முக்கியத்துவம் வாயந்தது. முக்கியமான விடயம் என்னவெனில் இங்கு வருமான வரி உட்பட எந்த விதமான வரிகளும் அறவிடப்படுவதில்லை.
மக்கள் : மொத்த மக்கள் தொகை 205,754 (ஆடி 2005). ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் பிஸ்லாமா ஆகிய மொழிகள் அரச மொழிகளாக உள்ளன. இதைவிட நூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் இங்கு பேசப்படுகின்றன. மொழி அடர்த்தி வேறெந்த நாட்டையும் விட இந்நாட்டில்தான் அதிகம் (2000 பேருக்கு ஒரு மொழி). அனைத்து மக்களும் கிறீத்தவ மதத்தை பின்பற்றுகிறார்கள்.
2006 ம் ஆண்டு மனிதர் வாழ்வதற்கு மிகவும் மகிழ்ச்சியான நாடாக வேறெந்த நாட்டையும் விட வனுவாத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நாட்டிலுள்ள
தொலைபேசிகள் எண்ணிக்கை - 6800 (2004)
கைப்பேசிகள் எண்ணிக்கை - 10500 (2004)
தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை - 2000 (1997)
இரயில் சேவை இல்லை
விமான நிலையங்கள் - 32
இராவத்தின் எண்ணிக்கை காவல்த்துறை உள்ளடங்கலாக - 300.